மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர் பதவிகளுக்கு தி.மு.க.,வில் போட்டா போட்டி; அமைச்சர்கள், மா.செ.,க்களை சுற்றிவரும் கவுன்சிலர்கள்
மதுரை: மதுரை மாநகராட்சியில் மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்தது ஏற்கப்பட்டதா இல்லையா என்ற குழப்பம் தீராத நிலையில் அப்பதவிகளை கைப்பற்ற தி.மு.க., கவுன்சிலர்களிடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.மாநகராட்சியில் தனியார் கட்டடங்களுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்ததில் ரூ.பல கோடி முறைகேடு நடந்தது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துகின்றனர். அமைச்சர் நேரு நேற்றுமுன்தினம் மாநகராட்சி அலுவலகத்தில் முகாமிட்டு, மண்டல தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, நிலைக்குழுத் தலைவர்கள் மூவேந்திரன் (நகரமைப்பு), விஜயலட்சுமி (வரிவிதிப்பு) ஆகியோரிடம் விசாரணை நடத்தி, அனைவரிடமும் ராஜினாமா கடிதங்கள் பெற்றார்.அனைத்து மண்டல தலைவர்களை ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், கடிதம் அளிக்காத மண்டலம் 1ன் தலைவர் வாசுகி நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் காலியாகும் மண்டலத் தலைவர் பதவிகளை கைப்பற்ற தி.மு.க., கவுன்சிலர்கள் தயாராகி விட்டனர்.மண்டலம் 2க்கு விஜயமவுஸ்மி, மகாலட்சுமி, மாலதி, ஜானகி, மண்டலம் 3க்கு ஜெயராம், நுார்ஜஹான், நாகநாதன், செல்வி, அமுதா தவமணி, கார்த்திக், மண்டலம் 4க்கு விஜயலட்சுமி, மண்டலம் 5க்கு இந்திரா காந்தி, போஸ் முத்தையா, லட்சிகாஸ்ரீ, காவேரி, கருப்பசாமி உள்ளிட்டோர் போட்டியிட தயாராக உள்ளனர். இவர்கள் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், மாவட்ட செயலாளர்கள் தளபதி, மணிமாறன் ஆகியோரின் சிபாரிசுக்காக அவர்களை தற்போதே வட்டமடிக்க ஆரம்பித்துள்ளனர்.தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது:
தற்போதைய மண்டல தலைவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்டால் போட்டி கட்டாயம் ஏற்படும். சம்பந்தப்பட்ட நான்கு மண்டலங்களிலும் தி.மு.க., கவுன்சிலர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதனால் கட்சித் தலைமை கை காட்டும் நபர் தான் மண்டலத் தலைவராக முடியும். சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில் தற்போது எந்த சமுதாயத்தை சேர்ந்தோர் பதவியில் இருக்கிறார்களோ அதே சமுதாயத்தில் இருந்தே தேர்வு செய்ய கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. குறிப்பாக குற்றப்பின்னணி, லஞ்சம் புகார் இல்லாதவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது என்றனர்.