இடமாற்றத்தால் மாநகராட்சி ஏ.இ., எஸ்.ஐ.,க்கள் ஆத்துல ஒரு கால்; சேத்துல ஒரு கால்... எஸ்.ஐ.ஆர்., பணியை மாற்றுங்கள் என போர்க்கொடி
மதுரை: மதுரை மாநகராட்சியில் அலுவலர்கள் மாற்றப்பட்டாலும் அவர்களுக்கான எஸ்.ஐ.ஆர்., தேர்தல் பணி மாறவில்லை. இதனால் அலைச்சலிலும் மன உளைச்சலிலும் தவிக்கின்றனர். மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடக்கின்றன. இதற்காக தற்போது பணியில் உள்ள வார்டு உதவி, இளநிலை பொறியாளர்கள் (ஏ.இ., ஜெ.இ.,க்கள்), சுகாதார ஆய்வாளர்கள் (எஸ்.ஐ.,), பில் கலெக்டர்களுக்கு கண்காணிப்பாளர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு கண்காணிப்பாளருக்கு கீழ் 10 பி.எல்.ஓ.,க்கள் (வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள்) உள்ளனர். ஒரு வார்டில் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையான வாக்காளர்கள் விவரம் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பான பணிகள் தற்போது மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில், மாநகராட்சியில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களான மண்டல உதவி கமிஷனர்கள் மேற்பார்வையில் நடக்கின்றன. இந்நிலையில் மாநகராட்சி பொறியியல் பிரிவின் சில ஏ.இ., ஜெ.இ.,க்கள் வார்டு பணிகள் மாற்றப்பட்டன. இதையடுத்து பழைய வார்டில் இருந்து புதிய வார்டுகளுக்கு மாறிய அலுவலர்கள் அங்கு வழக்கமான பணிகளில் ஈடுபட்டாலும் எஸ்.ஐ.ஆர்., பணிகளை பழைய வார்டுகளுக்கு சென்று மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஏற்கனவே ரூ.பல லட்சம் செலவில் புதிய 'செயலி' உருவாக்கியும் 'புகார் ஓரிடம், புகார்தாரர் ஓரிடத்தில் இருந்து' அளிக்கப்படும் 'வாட்ஸ்ஆப்' புகார்களுக்கு எளிதில் நடவடிக்கை எடுக்க முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. இதற்கிடையே எஸ்.ஐ.ஆர்., பணியும் கூடுதல் சுமையாக உள்ள நிலையில் பணியிட மாற்றம் மனஉளைச்சலை ஏற்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது: மழைக்காலம் பாதாளச் சாக்கடை பராமரிப்பு, குடிநீர் வினியோம் உள்ளிட்ட வழக்கமான வார்டு பணிகள் தினமும் சவாலாக உள்ளது. இதற்கிடையே எஸ்.ஐ.ஆர்., பணியும் கவனிக்க வேண்டியுள்ளது. இந்த சூழலில் இடமாற்ற நடவடிக்கை பெரும் சவாலாக உள்ளது. உதாரணமாக, பழங்காநத்தம் வார்டு அலுவலர் புதுார் வார்டுக்கு மாற்றப்பட்டால், அவர் புதுார் வார்டில் வழக்கமான பணியுடன் பழங்காநத்தம் வார்டில் எஸ்.ஐ.ஆர்., பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருப்பரங்குன்றம் மண்டல அலுவலகம் சென்று சமர்ப்பிக்க வேண்டும். இப்படி அலுவலர்கள் 'ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒரு கால்' என்ற நிலையில் தினம் அலைந்தால் எந்த பணியையும் முழுமையாக பார்க்க முடியாது. எனவே அலுவலருக்கான 'டிரான்ஸ்பர்' நடவடிக்கையை மாநகராட்சி நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது மாற்றப்படும் வார்டில் எஸ்.ஐ.ஆர்., பணி மேற்கொள்ளும் வகையில் தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் .
ஸ்டாலின் முகாம் நிதி
இன்னும் கிடைக்கல
மாநகராட்சி வார்டுகளில் இதுவரை 50க்கும் மேற்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நடத்தப்பட்டன. இதற்காக சம்பந்தப்பட்ட வார்டு ஏ.இ., ஜெ.இ.,க்கள் சொந்தப் பணத்தை செலவிட்டுள்ளனர். இதனால் அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து முகாமிற்கான ஒதுக்கப்பட்ட நிதி சமீபத்தில் ரூ.6.91 லட்சம் விடுவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஏ.இ., ஜெ.இ.,க்க ளுக்கு சென்று சேரவில்லை. கமிஷனர் சித்ரா நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.