உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை அரசு மருத்துவமனையில் எதிர்பார்ப்பு; தாமதமாகும் செயற்கை கருத்தரிப்பு மையம்

மதுரை அரசு மருத்துவமனையில் எதிர்பார்ப்பு; தாமதமாகும் செயற்கை கருத்தரிப்பு மையம்

மதுரை : மதுரை அரசு மருத்துவமனை செயற்கை கருத்தரிப்பு மையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கருவிகள், அறுவை சிகிச்சை அரங்கு அமைக்கப்படும் என கடந்தாண்டு அறிவித்தும் இன்னும் வழங்கப்படவில்லை.இங்கு மகப்பேறு வார்டு தனியாகவும் செயற்கை கருத்தரிப்பு மைய வார்டு தனியாகவும் உள்ளது. கடந்த ஜூனில் மட்டும் 96 பெண்கள் குழந்தையின்மைக்கு சிகிச்சை பெற்றனர். ஏற்கனவே உள்ளவர்களையும் சேர்த்து மொத்தம் 350 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 110 ஆண்கள் சிகிச்சையில் உள்ளனர். ஆண்களுக்கான ஸ்கேன், எக்ஸ்ரே, விந்தணு பகுப்பாய்வு பரிசோதனை வசதிகள் இங்குள்ளன.கருக்குழாய் அடைப்பு, குழந்தை தங்காதது, நீர்கட்டி, கருமுட்டை வளராமை, விந்தணு குறைப்பாடு போன்ற பிரச்னைகளால் குழந்தைப் பேறு தாமதமாகிறது. இங்கு கர்ப்பப்பைக்குள் விந்தணுவை செலுத்தும் ஐ.யு.ஐ., முறையில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கு தேவையான 'பாலிகுலார் ஸ்கேன்' உட்பட பல்வேறு கருவிகள் உள்ளன. கருமுட்டை உருவான பின் எச்.சி.ஜி. எனப்படும் விலை உயர்ந்த ஊசியும் செலுத்தப்படுகிறது. இந்த முறையில் மாதம் 5 பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.கருக்குழாய் அடைப்பு உள்ள பெண்களுக்கு ஐ.வி.எப்., முறையே சிறந்தது. கர்ப்பப்பையில் இருந்து கருமுட்டை எடுத்து விந்தணுவுடன் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டு கருவான பின் அதை நேரடியாக கர்ப்பப்பைக்குள் செலுத்தும் இந்த முறை அதிக செலவு பிடிக்கும் சிகிச்சை முறை. ஐ.வி.எப். சிகிச்சைக்கு என தனி அறுவை சிகிச்சை அரங்கு, அதிநவீன கருவிகள், கிரையோ ஸ்கேன், எச்.டி. ஸ்கேன், கல்ச்சர் மீடியா போன்ற வசதிகள் தேவை. இதற்கு கோடிக்கணக்கில் செலவாகும்.இங்குள்ள மையத்தில் அறுவை சிகிச்சை அரங்கு, நவீன கருவிகள் வைப்பதற்கான இடவசதி போதுமான அளவு உள்ளது. இதற்கென சிறப்பு மகப்பேறு நிபுணர்கள், செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை நிபுணர், பயிற்சி பெற்ற நர்ஸ்கள் உள்ளனர். இந்த சிகிச்சைக்காக 50 பெண்கள் காத்திருக்கின்றனர்.கடந்தாண்டு அறிவித்தது போல் நவீன வசதிகளுடன் கூடிய கருவிகள், அறுவை சிகிச்சை அரங்கு அமைத்தால் உடனடியாக சிகிச்சையை தொடங்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை