உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மேலுாரில் நெல் சாகுபடி குறைவுக்கு அதிகாரிகளே காரணம் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

மேலுாரில் நெல் சாகுபடி குறைவுக்கு அதிகாரிகளே காரணம் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

மதுரை 'மேலுார் பகுதியில் நெல் விவசாயம் குறைவதற்கு நீர்வளத்துறை அதிகாரிகளே காரணம்'' என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் மனம் குமுறினர்.மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது.அதிகாரி: மாவட்டத்தில் நெல் சாகுபடி கடந்த ஆண்டைவிட 19 ஆயிரம் எக்டேர் குறைவாக உள்ளது. விதை, பருவம் தவறிய மழையால் ஏற்பட்ட பாதிப்புக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்.கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிசாமி: நெல் சாகுபடி குறித்து அதிகாரிகள் பொய் தகவலை தரக்கூடாது. நீர்வளத்துறையின் தவறான வழிகாட்டுதலால் விளையாமல் போய்விட்டது. செப்.,ல் தண்ணீர் தர வலியுறுத்தியும் தரவில்லை. நிவாரணம் தரவேண்டும். இல்லையெனில் நீதிமன்றம் செல்வோம்.பெரியாறு பிரதான கால்வாய் விவசாயிகள் சங்க நிர்வாகி திருப்பதி: தண்ணீர் திறப்பை முன்னுரிமை கால்வாய்க்கு தராமல் திறந்துள்ளனர். சிங்கம்புணரி கால்வாய்க்கு இதுவரை தரவேயில்லை. வைகையில் தண்ணீர் திறக்க அக்.,4 ல் கடிதம் தந்தோம். ஆனால் நவம்பரில்தான் தண்ணீர் திறந்தீர்கள்.விவசாயி ராமன்: வைகை அணையில் இருந்து 33 கண்மாய்களுக்கான பிரிவு கால்வாய்களை சரிசெய்ய வேண்டும். கொக்குளம் பகுதியில் ஊத்துப்பட்டி செல்லும் 2 கி.மீ., கால்வாயை கைவிட்டுவிட்டனர். அதை முழுமையாக வெட்டி சரிசெய்ய வேண்டும்.திருப்பதி: நேரடி நெல் கொள்முதல் மையங்களில் வசூலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிப்பத்திற்கு ரூ.60 வசூலிக்கின்றனர். இதற்காக எத்தனை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.விவசாயி பாஸ்கரன்: உசிலம்பட்டி பகுதியில் மலர்கள் அதிகம் விளைகிறது. அங்கு 4 தாலுகாக்களை மையப்படுத்தி மலர்ச்சந்தை, சென்ட் தொழிற்சாலையை ஏன் அமைக்கக் கூடாது.டி.ஆர்.ஓ., சக்திவேல்: அரசுதான் இதனை முடிவு செய்ய வேண்டும்.விவசாயி பாஸ்கரன்: உரம், பூச்சி மருந்து வினியோகத்தில் போலி உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும்.இணை இயக்குனர் சுப்புராஜ்: மாதந்தோறும் உரம், பூச்சி மருந்து மாதிரி எடுக்கின்றனர். அதில் தவறு இருந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.விவசாயி: பூச்சி மருந்து சரியின்றி, நோய், பூச்சிகள் சாவதில்லை. இதனால் விவசாயிதான் மருந்து குடித்து தற்கொலைக்கு முயல்கிறான். அந்த மருந்து நல்ல மருந்தாக உள்ளது.விவசாயி: அச்சம்பத்து பகுதி யில் பிளாட் போட்டுள்ளனர், எனது விவசாய நிலத்திற்கு பாதை இல்லை. ெஹலிகாப்டரில் சென்றுதான் இறங்க வேண்டும்.கலெக்டர்: தொழிற்சாலை, பிளாட் அமைக்கும்போது கால்வாய் உட்பட நீராதாரங்களுக்கு இடையூறு கூடாது என்று கூறித்தான் உத்தரவிடுகிறோம். அது முறையாக நிறைவேற்றப்படுகிறதா என, துணைத்தாசில்தார், பொறியாளர்கள் நாளை அங்கு ஆய்வு செய்யுங்கள்.விவசாயி சண்முகம்: கூத்தன்குளத்தில் மரங்கள், கற்களை உடைத்து எடுத்துச் சென்றுவிட்டனர். கண்மாயில் கசிவு உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும்.கலெக்டர்: கண்மாயை நீங்களே பராமரிப்பது நல்லதுதான். நீர் கசியாமல் மடையை கட்டித்தர கூறுகிறேன். மரம், கற்களை திருடியவர்கள் மீது உதவி பொறியாளர் போலீசில் புகார் கொடுங்கள்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை