| ADDED : மார் 21, 2024 02:26 AM
உசிலம்பட்டி: அ.தி.மு.க., சார்பில் உசிலம்பட்டியில் வாக்காளர் பட்டியல் ஆய்வுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார், அமைப்புச்செயலாளர் மகேந்திரன், ஜெ.பேரவை மாநில துணைச்செயலாளர் துரைதனராஜன், உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி, உசிலம்பட்டி, எழுமலை நகர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது: தி.மு.க., மக்கள் விரோத போக்குடன் செயல்படுகிறது. போதைப்பொருள் கேந்திரமாக தமிழகம் மாறியுள்ளது. ஜீவாதார உரிமைகள் பறிபோகும் போது ஸ்டாலின் மவுனச்சாமியாராக இருக்கிறார். விலைவாசி, மின்கட்டணம், சொத்துவரி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு என மாநில அரசுமீது மக்கள் கோபத்தில் இருக்கின்றனர்.மத்திய அரசும் மற்ற மாநிலங்களுக்கு காட்டுகிற அணுகுமுறை, வளர்ச்சித்திட்டங்களை தமிழகத்திற்கு தரவில்லை. அ.தி.மு.க.. ஆட்சியில் தான் 11 மருத்துவக் கல்லூரிகளை பெற்றோம். எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றோம். கடந்த 3 ஆண்டுகளில் வளர்ச்சித்திட்டம் பூஜ்யமாக உள்ளது. கடந்த தேர்தலில் தேனி லோக்சபா தொகுதியில் பெற்ற வெற்றியைப் போல பிரமாண்டமான வெற்றியைப் பெறுவோம்.அ.தி.மு.க., வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பழனிச்சாமி என தொண்டர்கள், மக்கள், நீதியரசர்கள், தேர்தல் ஆணையமும் எல்லோரும் தெளிவாக தீர்ப்பு சொல்லியிருக்கின்றனர். அதற்குப் பிறகும் தெளிவு கிடைக்காதவர்கள் பற்றி என்ன கருத்து சொல்ல முடியும். பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பது பற்றி தேர்தல் முடிந்தவுடன் சொல்கிறோம் என்றார்.