| ADDED : டிச 31, 2025 06:12 AM
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தை மறு சீரமைப்பு, புனரமைப்பு செய்வதற்காக இரண்டாண்டுக்கு முன் பணிகள் துவங்கப்பட்டன. ஆனால் டிஜிட்டல் பணிகள் முடியாமல் இழுபறியாக இருக்கிறது. ராணி மங்கம்மாள் அரண்மனை காந்தி மியூசியமாக மாற்றப்பட்ட நிலையில் பழமை மாறாமல் அதை புதுப்பிப்பதற்காக தமிழக அரசு இரண்டாண்டுகளுக்கு முன் ரூ.12 கோடி ஒதுக்கியது. அதில் ரூ.3 கோடி டிஜிட்டல் பணிக்காக மட்டும் ஒதுக்கப்பட்டது. அரண்மனையுடன் பல ஆண்டுகளுக்கு முன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் பிரிக்கப்பட்டு ராணி மங்கம்மாள் காலத்தில் இருந்ததைப் போன்ற அரண்மனை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. குறிப்பாக தர்பார் ஹாலின் சுவர்கள், தரைத்தளப்பகுதி பாரம்பரிய முறைப்படி மீண்டும் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. இரண்டு தளங்களுக்குச் செல்லும் லிப்ட் வசதி, இரண்டாவது மாடியில் 50 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் ஒலி ஒளி காட்சி தியேட்டர் (ஏ.வி. ), வர்ணப்பூச்சு பணிகள் முடிந்து விட்டன. இத்தியேட்டரில் காந்தியின் வரலாறு, இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்த காட்சிகள் திரையிடப்படும். தரைத்தளம், முதல், இரண்டாம் தளம் வரையிலான பணிகள் முடிந்துள்ளன. மியூசியத்தை சுற்றிப்பார்த்து பார்வையாளர்கள் வெளியேறும் இடத்தின் தரைத்தளத்திலும் 30 பேர் அமரும் வகையில் மற்றொரு ஒலி ஒளி காட்சி தியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஏ.வி. ஹால் 30 பேர் அமரும் வகையில் ஏ.வி. தியேட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு மியூசிய வரலாறு பற்றிய காட்சிகள் ஒளிபரப்பப்படும். இரண்டாண்டுகளுக்கு முன் பணிகள் தொடங்கப்பட்டு அனைத்தும் முடிந்த நிலையில் டிஜிட்டல் பணிகள் மட்டும் பாக்கியுள்ளன. காந்திய பேராசிரியர்கள், வரலாற்று ஆசிரியர்கள் மூலம் காந்திய வரலாறு குறித்த 'ஸ்கிரிப்ட்' தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி இரண்டு மாதங்களாகிறது. டிஜிட்டல் வடிவில் 'மல்டி மீடியா' மூலம் குரல் பதிவு, காட்சிப்பதிவு, போட்டோ பதிவுகளாக கருத்துருவுக்கு ஏற்றாற் போல் ஒருங்கிணைக்க வேண்டும். உதாரணமாக ஜாலியன் வாலாபாக் படுகொலை துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விளக்கும் காட்சியில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கும். காந்தி உப்பு சத்தியாகிரக காட்சியில் காந்தி நடந்து வரும் போது நடையின் சத்தம் கேட்கும் வகையில் டிஜிட்டலில் தத்ரூபமாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னமும் 'ஸ்கிரிப்ட்' சரிபார்ப்பு நிலையில் இருப்பதால் டிஜிட்டல் பணிகள் துவங்கவில்லை. ஜன. 30 காந்தி நினைவுநாள். டிஜிட்டல் பணிகளுக்கான வயரிங், லைட்டிங் பணிகள் முடிந்துள்ளன. இப்போதே டிஜிட்டல் பணிகளைத் துவங்கினால் தான் ஒரு மாதத்திற்குள் பணியை முடித்து காந்தி நினைவு நாளில் மியூசியத்தை பார்வையாளர்கள் பார்க்க அனுமதிக்க முடியும். சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டால் திறப்பு விழா தள்ளிப்போகும். எனவே தாமதமின்றி டிஜிட்டல் பணிகளை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.