| ADDED : பிப் 03, 2024 05:50 AM
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.,பஸ் ஸ்டாண்ட் முன்புறம் தெருவோர வியாபாரிகளுக்கு அனுமதியளித்த போலீஸ் உதவி கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை மாட்டுத்தாவணி (எம்.ஜி.ஆர்.,) பஸ் ஸ்டாண்ட் மற்றும் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் வெளிப்புறம் சிலர் கடைகள் நடத்துகின்றனர். இவர்கள், 'தெருவோர வியாபாரிகளின் (வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்துதல்) சட்டப்படி விற்பனைக் குழுவை அமைக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். சிலருக்கு அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) மூலம் 2013 ல் தற்காலிக உரிமம் வழங்கப்பட்டது. எங்களை வெளியேற்ற மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு தடை விதிக்க வேண்டும்,' என மனு செய்தனர்.நீதிபதி பி.புகழேந்தி:மனுதாரர்கள் எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்ட் மற்றும் ஆம்னி பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே கடைகள் நடத்துகின்றனர். மாநில நெடுஞ்சாலையோரம் கடைகள் அமைந்துள்ளன. மனுதாரர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை அனுமதி வழங்க மறுத்துள்ளது. பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் 30 மீட்டர் பகுதியில் வியாபாரம் செய்யக்கூடாது. தெருவோர வியாபாரிகளின் (வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்துதல்) சட்டப்படி யாருக்கும் உரிமம் வழங்கவில்லை என மாநகராட்சி தரப்பு நிலைப்பாடு எடுத்துள்ளது. இருப்பினும் மனுதாரர்கள் அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் அளித்த அனுமதியின் அடிப்படையில் கடைகளை நடத்துகின்றனர். அத்தகைய அனுமதி வழங்க அவர் தகுதியான அதிகாரி அல்ல. அவர் எந்த அதிகாரமும் இன்றி அனுமதி வழங்கியதால், மனுதாரர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேல் கடைகளை நடத்துகின்றனர்.கால வரம்பு எதுவும் குறிப்பிடாமல் தற்காலிகமாக 2013 ல் அனுமதி வழங்கப்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்தி, மனுதாரர்கள் தடையின்றி கடைகளை நடத்துகின்றனர்.போலீஸ் உதவி கமிஷனர் எத்தகைய அதிகாரத்தின் கீழ் உரிமங்களை வழங்கினார் என இந்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து நேரடியாக பதில் இல்லை. மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் முன்புறம் கடைகள் நடந்த 30 க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு போலியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்க உதவி கமிஷனருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை ஒப்புக்கொண்டாலும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் முன்வரவில்லை.இவ்வழக்கில் மாநில நெடுஞ்சாலைத்துறை ஒரு எதிர்தரப்பாக சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு இந்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய பிறகும், தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டப்படி கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. ஆக்கிரமிப்புகள், தற்காலிக கட்டமைப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. முன்னறிவிப்பு நோட்டீஸ் அளிக்காமல்கூட ஆக்கிரமிப்புகளை அகற்றலாம். இது தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் 30 மீட்டரில் தெருவோர வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்த மாநகராட்சியும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இக்கடைகளால் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் மக்கள் அவதிப்படுகின்றனர். இக்கடைகளால் எத்தனை விபத்துகள் நடந்துள்ளன என்பது தெரியவில்லை. சட்டப்படி செயல்பட வேண்டிய அதிகாரிகள் 10 ஆண்டுகளாக மவுன பார்வையாளர்களாக உள்ளனர்.மனுதாரர்களை தெருவோர வியாபாரிகள் சட்ட விதிகள்படி தெருவோர வியாபாரிகளாக கணக்கிடவில்லை. சட்டத்தின்படி நிவாரணம் கோர உரிமையற்றவர்கள் என மாநகராட்சி தரப்பு கூறுகிறது. இவ்வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.தெருவோர வியாபாரிகள் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள விற்பனைக் குழுவை மனுதாரர்கள் அணுகலாம். அதை பரிசீலித்து ஏதேனும் ஒரு பகுதியில் கடைகளை ஒதுக்கலாம்.பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே கடைகள் வைக்க 2013 ல் 30 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அனுமதி அளித்த போலீஸ் உதவி கமிஷனர் மீது துறை ரீதியான நடவடிக்கையை போலீஸ் கமிஷனர் மேற்கொள்ள வேண்டும். பஸ் ஸ்டாண்டின் இருபுறமும் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படாத பகுதி என்ற அறிவிப்பு பலகையை மாநகராட்சி நிறுவ வேண்டும். பயணிகளுக்கு நடைபாதை வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையோரங்களில் ஏதேனும் கடைகள், பூத்கள், தற்காலிக கட்டுமானங்கள் குறித்து கீழ்நிலை அலுவலர்களிடமிருந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை பெற்று, நெடுஞ்சாலைத்துறையின் செயற்பொறியாளர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.நெடுஞ்சாலைகள் சட்டப்படி அனுமதி வழங்கப்பட்டால், ஒவ்வொரு ஆண்டும் சம்பந்தப்பட்ட போலீசாரிடமிருந்து தடையில்லாச் சான்று பெற்று, போக்குவரத்தைப் பொறுத்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.உரிமம் வழங்கும்போது அதற்குரிய காரணங்களை சான்றிதழில் குறிப்பிட வேண்டும். இச்சான்றிதழை அனைவருக்கும் பார்வையில் தெரியும் வகையில் கடைக்காரர்கள் வைக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.