வழக்கறிஞர் சங்கங்களை ஆய்வு செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை: அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர் சங்கங்களின் பதிவு நிலை, சட்டப்பூர்வ செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய தாக்கலான வழக்கில் பார் கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் சங்கங்கள் பதிவு செய்யப் படுகின்றன. மாவட்ட சங்கங்களின் பதிவாளரிடம் ஆண்டு வருமானம், தணிக்கை அறிக்கைகள், தீர்மானங்களை தாக்கல் செய்யத் தவறுகின்றன. இதுபோன்ற சூழலில் சங்கத்தை தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் அங்கீகரிக்கிறது. பல வழக்கறிஞர் சங்கங்கள் பதிவுச்சட்டப்படி செயல்படுவதில்லை. சில ஜாதி அல்லது பிரிவு அடிப்படையில் உள்ளன. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர் சங்கங்களின் பதிவு நிலை, சட்டப்பூர்வ செயல்பாடு குறித்து ஆய்வு வேண்டும். சரிபார்ப்பிற்குப் பின் பார் கவுன்சில் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பதை உறுதி செய்ய வேண்டும். அதுவரை வாக்காளர் பட்டியலை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர், இந்திய பார் கவுன்சில் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பி நவ.,27ல் பதில் மனு செய்ய உத்தரவிட்டது.