| ADDED : நவ 27, 2025 09:12 AM
மதுரை: பொய் வழக்கால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரை சேர்ந்தவருக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுக்கூர் சரத்குமார் தாக்கல் செய்த மனு: நான் உட்பட 5 பேர் வழிப்பறி செய்ய திட்டமிட்டதாக மதுக்கூர் போலீசார் 2017ல் வழக்கு பதிந்தனர். இது பொய் வழக்கு. இதனால் எனக்கு வேலை கிடைக்கவில்லை. விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எதிர்காலம் பாதித்துள்ளது. வழக்கை ரத்து செய்ய வேண்டும். இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு எதிரான பொய் வழக்கு ரத்து செய்யப்படுகிறது. ரத்து செய்வது மட்டும் மனுதாரருக்கு முழுமையான நீதியை வழங்காது. மனுதாரரின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன. நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி என்பது உண்மைதான். ஒருவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நிலுவையில் இருப்பதால் நற்பெயருக்கு களங்கம், சமூக அந்தஸ்து, வேலை வாய்ப்பு இழப்பு, தனிப்பட்ட உறவுகளில் விரிசல், உளவியல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற உரிமை உண்டு என ஐ.நா., அறிவித்துள்ளது. மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.8 லட்சத்தை தமிழக உள்துறை அமைச்சகம் வழங்க வேண்டும். இதை சம்பந்தப்பட்ட போலீசாரிடமிருந்து வசூலிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.