தாமிரபரணியில் கழிவுநீர் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தாக்கலான வழக்கில் இரு நீதிபதிகள் ஆய்வு மேற்கொள்வது குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.துாத்துக்குடி செய்துங்கநல்லுார் காமராஜ் 2018 ல் தாக்கல் செய்த பொதுநல மனு: திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் கரையில் பழமையான மண்டபங்கள், படித்துறைகள் உள்ளன. இவற்றை புதுப்பிக்க வேண்டும். ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் தடுத்து, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். ஆற்றை துாய்மையாக பராமரிக்க நடவடிக்கைகோரி தமிழக அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை செயலர்கள், திருநெல்வேலி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.கழிவு நீர் கலப்பதை தடுக்க நீர்நிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வு அவ்வப்போது உத்தரவு பிறப்பிக்கிறது. இதனடிப்படையில் அரசு தரப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு நேற்று விசாரித்தது.திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா ஆஜராகி கூறியதாவது: கழிவுநீர் கலப்பதை தடுக்க இரண்டாம் கட்ட பணியில் 90 சதவீதம் முடிந்துள்ளது. மீதம் 10 சதவீத பணி டிசம்பரில் முடிவடையும். மூன்றாவது கட்ட பணி 2025 செப்டம்பருக்குள் நிறைவடையும். இவ்வாறு தெரிவித்தார்.நீதிபதிகள்: நாங்கள் இருவரும் நவ.10 ல் தாமிரபரணி ஆற்றில் 20 இடங்களில் ஆய்வு செய்ய உள்ளோம். உடன் திருநெல்வேலி மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வர வேண்டும். ஆய்விற்கு பின் மேல்நடவடிக்கை குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும். விசாரணை நவ.15க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.