போராட்டத்திற்கு அனுமதி கோரி நாம் தமிழர் கட்சி வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : போலீஸ் காவலில் மடப்புரம் கோயில் காவலாளி இறந்ததற்கு எதிராக திருப்புவனத்தில் போராட்டம் நடத்த நாம் தமிழர் கட்சி போலீசாரிடம் மனு அளிக்க வேண்டும். அதை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தாக்கல் செய்த மனு: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் காவலில் இறந்ததற்கு எதிராக திருப்புவனத்தில் போராட்டம் நடத்த உள்ளோம். தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கிறார். போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.அரசு வழக்கறிஞர் அந்தோணி சகாய பிரபாகர்: கண்டதேவி கோயில் தேரோட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டி இருந்தது. இதனால் அனுமதி மறுக்கப்பட்டது.நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஏற்கனவே இக்கட்சி ஜூலை 3 ல் போராட்டம் நடத்தியுள்ளது. அதில் அதன் தலைவர் பங்கேற்கவில்லை என்பதற்காக அதே காரணத்திற்காக மீண்டும் ஒரு போராட்டம் நடத்த உள்ளனர். அனுமதிக்கவில்லை எனில் தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்பது ஏற்புடையதல்ல. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.போராட்டம் நடத்த அரசியல் கட்சிக்கு உரிமை உள்ளது. அதை மக்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்த வேண்டும். ஜூலை 3 ல் நடந்த போராட்டத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.போராட்டம் நடத்த அனுமதிகோரி மனுதாரர் புதிதாக போலீசாரிடம் மனு அளிக்க வேண்டும். அதை 24 மணி நேரத்தில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.