உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு பரிசீலனை உயர்நீதிமன்றத்தில் தகவல்

விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு பரிசீலனை உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே விபத்தில் தாய், தந்தை, சகோதரனை இழந்த 4 பெண் குழந்தைகளை பராமரிக்க இழப்பீடு கோரியதில்,'​பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வருவாய்த்துறையால் பரிசீலிக்கப்படும்,' என தமிழக அரசு தரப்பு தெரிவித்ததை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை பைசல் செய்தது.நத்தம் அருகே லிங்கவாடி செல்லம்மாள் தாக்கல் செய்த மனு:எனது மகன் முருகன். அவரது மனைவி பஞ்சு. இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை பிறந்தனர். மகன், மருமகள் கூலி வேலை செய்தனர். மகன், மருமகள் மற்றும் பேரன் ஒரு டூவீலரில் நத்தம்- --மதுரை சாலையில் 2024 ஆக.22 ல் சென்றனர். அது விபத்திற்குள்ளானது. மூன்று பேரும் இறந்தனர். நத்தம் போலீசார் வழக்கு பதிந்தனர்.நான்கு பேத்திகளை பராமரித்து வருகிறேன். இறப்புச் சான்று, சட்டப்பூர்வ வாரிசுச் சான்றுடன் முதல்வரின் பொது நிவாரண நிதி அல்லது பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண திட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி தமிழக உள்துறை கூடுதல் செயலர், டி.ஜி.பி., திண்டுக்கல் கலெக்டருக்கு மனு அனுப்பினேன். இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார்.அரசு தரப்பு: ​மனுதாரரின் கோரிக்கை மனு திண்டுக்கல் ஆர்.டி.ஓ.,வின் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு எண் இடப்பட்டுள்ளது. மனுவின் மூப்புத் தன்மைக்கேற்ப (சீனியாரிட்டி) பரிசீலனைக்கு வரும்போது, ​​பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வருவாய்த்துறையால் அது முறையாக பரிசீலிக்கப்படும். இவ்வாறு தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதி பைசல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை