உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு மருத்துவமனையின் புதிய டவர் பிளாக்கில் பணியாளர்கள் பற்றாக்குறையால் பணிகளில் தொய்வு

அரசு மருத்துவமனையின் புதிய டவர் பிளாக்கில் பணியாளர்கள் பற்றாக்குறையால் பணிகளில் தொய்வு

மதுரை, : மதுரை அரசு மருத்துவமனையில் புதிதாக திறக்கப்பட்ட 'டவர் பிளாக்' மருத்துவ வளாகத்தில் நிரந்தர பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் என டாக்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இம்மருத்துவமனையில் ஜப்பான் நாட்டு கூட்டுறவு முகமை நிறுவன ஒப்பந்தம் மூலம் ரூ.313 கோடி செலவில் 'டவர் பிளாக்' கட்டடம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இவ்வளாகத்தில் 2 லட்சத்து 9596 சதுர அடி பரப்பில் தரைதளத்துடன் ஆறு தளங்கள் இணைந்துள்ளன. தரைத்தளத்தில் இதயப்பிரிவு, அவசரக்கால சிகிச்சை, ரேடியாலாஜி பிரிவும் முதல் தளம் முழுவதும் அதிநவீன கேத்லேப் வசதியுடன் கூடிய இதய அறுவை சிகிச்சை, ஐ.சி.யு., வார்டு, 2வது தளத்தில் மூளை அறுவை சிகிச்சை, ரத்தக்குழாய் பிரிவு, சிறுநீரக வார்டு, 3வது தளத்தில் இதய ரத்த நாள பிரிவு வார்டுகள் உள்ளது.நான்கு, ஐந்தாவது தளங்களில் தலா எட்டு அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகளும் 6வது தளத்தில் ஆறு அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கும் ஒரு 'ஹைபிரிட்' அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளது. இந்த 'ஹைபிரிட்' அறுவை சிகிச்சை அரங்கில் இரண்டு 'சி.ஆர்ம்' கருவிகள் உள்ளதால் எந்த விதமான சிக்கலான அறுவை சிகிச்சையும் இங்கு மேற்கொள்ள முடியும். இந்தியாவில் வேறு எங்கும் இந்த வசதி இல்லை. மொத்தம் 300 படுக்கைகள் உள்ளன. திறப்பு விழாவிற்காக தற்காலிகமாக மின் இணைப்பு கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது நிரந்தர மின் இணைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த வளாகத்திற்கு என தனியாக டாக்டர், நர்ஸ், சுகாதார மற்றும் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.டாக்டர்கள் கூறுகையில் 'அறுவை சிகிச்சையை இங்கு செய்ய ஆரம்பித்தால் ஏற்கனவே வார்டுகளில் உள்ள டாக்டர், நர்ஸ்கள், சுகாதார, மருத்துவ பணியாளர்களை தான் இடம் மாற்றம் செய்ய வேண்டும். ஏற்கனவே நர்ஸ்கள் பற்றாக்குறை உள்ளது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக பணியாளர்களை உடனடியாக நியமித்தால் அறுவை சிகிச்சை அரங்கு வளாகம் தொடர்ந்து தொய்வின்றி செயல்பட முடியும்' என்றனர்.இது குறித்து மருத்துவ அதிகாரி கூறுகையில் 'கட்டுமான பணி முடிவதற்கு முன்பாகவே இந்த வளாகத்திற்கு தேவையான பணியாளர்கள் குறித்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் பணி நியமனம் நடைபெறும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்