மதுக்கடைகளை முடிவு செய்யும் அதிகாரம் தேவை கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்
மதுரை: 'மதுக்கடைகளை திறப்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை அந்தந்த கிராமங்களுக்கே வழங்க வேண்டும்' என கிராம சபை கூட்டத்தில் தீர்மனம் நிறைவேற்றப்பட்டது. கொட்டாம்பட்டி
கம்பூர் ஊராட்சி கோவில்பட்டி, அய்யாபட்டி ஊராட்சி வைரவன்பட்டி மற்றும் கேசம்பட்டி கிராமங்களில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர்கள் கதிரேசன், கிருஷ்ணன், துணை தலைவர் உமா தலைமை வகித்தனர்.வைரவன்பட்டியில் இருந்து திருச்சுனை பள்ளிக்கு செல்லும் வழியில் பாலம் அமைக்க வேண்டும். பெரியஅருவி நீர்தேக்க அணைக்கட்டு பகுதி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். மதுபான கடைகளை தங்கள் ஊராட்சியில் திறக்கலாமா, வேண்டாமா என முடிவு செய்யும் அதிகாரத்தை அந்தந்த ஊராட்சிக்கே வழங்க சட்ட திருத்தம் வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருமங்கலம்
கள்ளிக்குடி அருகே திருமால் கிராமத்தில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். நேற்று ஊராட்சித் தலைவர் பேச்சியம்மாள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணைத் தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.கூட்டம் தொடங்கியதும் கிராமத்தினர் திரண்டு கிராமத்தில் புதிதாக அமைய உள்ள கல் குவாரியை அமைக்க கூடாது, கல் குவாரி அமைத்தால் நிலத்தடி நீர் குறைந்து, விவசாயம், கால்நடைகள் பாதிக்கப்படும் என்றனர். இதையடுத்து தீர்மானமும் நிறைவேற்றினர். திருப்பரங்குன்றம்
விளாச்சேரி கூட்டத்திற்கு தலைவர் முருகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் முத்து லெட்சுமி முன்னிலை வகித்தார். மாநகராட்சியுடன் விளாச்சேரி ஊராட்சியை இணைக்க கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு மற்ற தீர்மானங்கள் குறித்து பேச வேண்டும் என செல்லமுத்து கூறினார். தொடர்ந்து, ரூ.5 லட்சம் செலவில் செயல்படாமல் இருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை திறக்க வேண்டும். விளாச்சேரியில் இருந்து வடிவேல்கரை வரை தார் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரினர்.சாமநத்தத்தில் தலைவர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் தனசேகர பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அனைவருக்கும் குடிநீர் வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.ஏற்குடி அச்சம்பத்தில் தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பேராட்சி பிரேமா முன்னிலை வகித்தார். விரிவாக்க பகுதிகளில் சாலை, தெரு விளக்கு வசதிகள் செய்து கொடுக்க மக்கள் கோரிக்கை வைத்தனர்.கள்ளந்திரி கிராம சபை கூட்டம் ஆமந்துார்பட்டி ஊராட்சித் தலைவர் ஆசைத்தம்பி தலைமையில் நடந்தது. பயிற்றுனர் சேகர், பற்றாளர் கலைச்செல்வி, ஊராட்சி துணைத் தலைவர் அழகன் பங்கேற்றனர். மாத்துாரில் ஊராட்சி தலைவர் குணவதி தலைமையில் நடந்தது. கணக்காளர் செல்வி, துணைத் தலைவர் ஞானசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர். காதக்கிணறில் தலைவர் செல்வி தலைமையில் துணைத்தலைவர் ஜெயந்தி உட்பட பலர் பங்கேற்றனர். செட்டிக்குளத்தில் தலைவர் பூங்கோதை தலைமையில் பி.டி.ஓ.,க்கள் சோனாபாய், அழகுபாண்டி பங்கேற்றனர்.