| ADDED : டிச 28, 2025 06:09 AM
மதுரை: மதுரை யாதவா கல்லுாரியில் அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை, பொது சுகாதாரத்தில் புதுமைகள் தலைப்பில் சர்வதேச மாநாட்டின் தொடக்க விழா நடந்தது. முதல்வர் ராஜூ தலைமை வகித்தார். பாடத்திட்டக் குழு தலைவர் அழகப்பன் வரவேற்றார். பார்க் பிளாசா குழும நிறுவனர் கே.பி.எஸ். கண்ணன் கல்வி, தொழில் முறை குறித்த தொடர்புகள் பற்றி விளக்கினார். அழகப்பா அரசு கல்லுாரி உதவிப் பேராசிரியர் அர்ஜூனன், தேசிய சுகாதாரம், குடும்ப நலத்துறை செயல் தலைவர் தர்மேந்திர யாதவ், பிலாஸ்பூர் அடல் பிஹாரி வாஜ்பாய் பல்கலை கணினி அறிவியல் பயன்பாட்டுத் துறைத் தலைவர் ஹோட்டா, அமெரிக்க கிழக்கு கடற்கரை மேரிலாண்ட் பல்கலை வணிக மேலாண்மை மற்றும் கணக்கியல் துறைப் பேராசிரியர் தினேஷ் சர்மா ஆகியோர் 'ஆராய்ச்சி, சிக்கல் தீர்க்கும் செயல்பாடுகளில் கணிதக் கோட்பாடுகளின் அடிப்படைப் பங்கு' குறித்து பேசினர். தற்கால ஆராய்ச்சிகளில் தரவு பருப்பாய்வு, வளர்ந்து வரும் ஆராய்ச்சி பகுதிகளோடு கணக்கீட்டு நுட்பங்களை ஒருங்கிணைப்பது குறித்தும் எடுத்துரைத்தனர். கனடாவின் நிபிரிங் பல்கலை இயக்குநர் சிவபிரசாத் ரவி சர்வதேச வணிகத்தின் வரிகள் மற்றும் எதிர்கால நிலை குறித்தும், மதுரை ஐ.சி.எம்.ஆர்., ஓய்வுபெற்ற விஞ்ஞானி மாரியப்பன் வெக்டார் மூலம் பரவும் நோய்கள் பற்றியும், தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலை முன்னாள் பதிவாளர் முருகன் வாழ்க்கையில் கணிதத்தில் பயன்பாடுகள் குறித்தும் பேசினர். கல்லுாரி தலைவர் ஜெயராமன், செயலாளர் ஆர். வி. என். கண்ணன், பொருளாளர் கிருஷ்ணவேல், துணை முதல்வர் கிருஷ்ணவேணி, சுயநிதிப் பிரிவு இயக்குநர் ராஜகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லுாரித் தேர்வாணையர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.