உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இழப்புகள் அல்ல; இறுதி முடிவு தான் முக்கியம்: முப்படை தலைமை தளபதி

இழப்புகள் அல்ல; இறுதி முடிவு தான் முக்கியம்: முப்படை தலைமை தளபதி

புனே: மஹாராஷ்டிராவின் புனேயில் உள்ள சாவித்ரிபாய் பூலே புனே பல்கலையில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் பேசியதாவது:'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, நம் ராணுவத்தின் எத்தனை விமானங்கள் வீழ்த்தப்பட்டன என, என்னிடம் கேட்கப்பட்டது. 'இழப்புகள் முக்கியமல்ல; இறுதி முடிவு தான் முக்கியம்' என பதிலளித்தேன். இழப்புகளை பற்றி பேசுவது சரியாக இருக்காது. போரில் பின்னடைவு ஏற்படுவது என்பது தற்காலிகமானது. இந்த நேரத்தில் நாம் மன உறுதியுடன் இருக்க வேண்டும். அந்த பின்னடைவில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, சரியான பதிலடி கொடுக்க வேண்டும். இழப்புகள் முக்கியமல்ல; ஆனால் இறுதி முடிவு என்ன என்பது தான் முக்கியம். பாகிஸ்தானில் அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டும் என்பதே ஆப்பரேஷன் சிந்துாரின் குறிக்கோள்.பயங்கரவாத நடவடிக்கை வாயிலாக, நம் நாட்டை பிணைக் கைதிகளாக வைத்திருக்க முடியாது. பயங்கரவாதம் மற்றும் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு நம் நாடு அஞ்சாது. நம் படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்தும்படி கெஞ்சியது. நம்மை மண்டியிட வைக்க நினைத்தவர்களை, வெறும் எட்டு மணி நேரத்தில் மண்டியிட வைத்து கெஞ்ச வைத்தோம். பாக்., மன்றாடியதாலேயே போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டோம். பாக்., வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஊடுருவி, துல்லியமாகவும், ஆழமாகவும் நம் படைகள் தாக்குதல் நடத்தின. நம்மிடம் மிகச்சிறந்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு உள்ளது. ஆப்பரேஷன் சிந்துார் இன்னும் முடிவடையவில்லை; தொடர்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை