குன்றத்தில் கந்த சஷ்டி திருவிழா நாளை துவக்கம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நாளை (அக். 22) துவங்குகிறது. காலை 7:00 மணிக்கு அனுக்ஞை பூஜை, யாகசாலை பூஜை முடிந்து ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானை, உற்ஸவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிவாச்சாரியார்களால் காப்பு கட்டப்படும். திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டிய பின்பு காலை 9:00 மணிக்கு மேல் விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படும். கந்த சஷ்டி திருவிழாவில் பெண் பக்தர்கள் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற் கொள்வர். திருவிழா நாட்களில் தினமும் காலையில் யாகசாலை பூஜையும், காலை, மாலையில் சண்முகார்ச்சனையும் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக அக். 26ல் வேல் வாங்குதல், அக். 27ல் சூரசம்ஹார லீலை, அக். 28, காலையில் சட்ட தேரோட்டம், மாலை 4:00 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தைல புண்ணியாகவாசனமாகி பாவாடை நைவேதன தரிசனம் நடைபெறும். யாகசாலை பூஜை நடக்கும் விசாக கொறடு மண்டபம் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. தினை மாவு பிரசாதம் கோயிலில் தங்கி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தினமும் மதியம் தினை மாவு, மாலையில் எலுமிச்சம் பழச்சாறு, இரவு பால், வாழைப்பழம் ஆகியன உபயதாரர்கள் மூலம் இலவசமாக வழங்கப்படும். தினமும் 3 ஆயிரம் பக்தர்களுக்கு தினை மாவு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. அதற்காக தினை மாவுடன், தேன், சர்க்கரை, சுக்கு, ஏலக்காய் , நெய் கலந்து தயாரிக்கும் பணி நடக்கிறது.