| ADDED : செப் 17, 2011 03:11 AM
மதுரை : மதுரையில் நடந்த ஆசிரியர் கவுன்சிலிங்கிற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.துவக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு கவுன்சிலிங் நேற்று துவங்கியது. மதுரையில் ஞானஒளிபுரம் ஆர்.சி., நடுநிலைப் பள்ளியில் துவக்கக் கல்வி அலுவலர் ஞானகவுரி தலைமையில், நேற்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.காலையில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளியில் பணியாற்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு இடஒதுக்கீடு, மாலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது. காலையில் 10 பேருக்கும், மாலையில் 12 பேருக்கும் பதவி உயர்வு, இடமாறுதல் கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.கவுன்சிலிங் நடக்கும்போது ஆசிரியர் மணிகண்டன், மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார். கிழக்கு யூனியனில் காலியிடங்களை முறையாக காட்டாவிட்டால் தீக்குளிக்கப் போவதாக அவர் அறிவித்ததால் பரபரப்பானது. அங்கிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்தனர்.கிழக்கு யூனியன் கபீர்நகர் பஞ்., நடுநிலைப் பள்ளியில் காலியிடம் இருந்தது. அதற்கு கொட்டாம்பட்டியில் இருந்து ஆசிரியை ஒருவர், செப்., 3ம் தேதியே இடமாறுதல் பெற்று வந்துவிட்டார். இந்த இடத்தையும் கவுன்சிலிங்கில் காண்பிக்க வேண்டும் என ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்த தென்னவன் உட்பட பலர் கோரிக்கை விடுத்தனர்.