உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தென்மாவட்டங்களில் எஸ்.சி., எஸ்.டி., வழக்குகள் பதிவு செய்ததில் மதுரை முதலிடம்

தென்மாவட்டங்களில் எஸ்.சி., எஸ்.டி., வழக்குகள் பதிவு செய்ததில் மதுரை முதலிடம்

மதுரை: '' தென்மாவட்டங்களில் 2020 முதல் 2025 ஜூன் வரை எஸ்.சி., எஸ்.டி., பிரிவின் கீழ் 3041 வழக்குகள் பதிவு செய்ததில் மதுரை 514 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. வழக்குகளை ரத்து செய்ததில் புதுக்கோட்டை முதலிடத்தில் உள்ளது'' என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. மதுரை சமூகஆர்வலர் கார்த்திக் கூறியதாவது: கடந்த 2020 முதல் 2025 ஜூன் வரையிலான நாலரை ஆண்டுகளில் எஸ்.சி. எஸ்.டி பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விபரங்கள் மற்றும் உண்மையற்றது எனக்கூறி ரத்து செய்யப்பட்ட வழக்குகளின் விபரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கேட்டிருந்தேன். தற்போது அதற்கு பதில்கள் கிடைத்துள்ளன. 9 தென்மாவட்டங்களில் நாலரை ஆண்டுகளில் 3041 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும், உண்மையற்றதாக கூறி 509 வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. வழக்குகள் பதிவு செய்ததில் 514 வழக்குகளுடன் மதுரை முதலிடத்திலும், 465 வழக்குகளுடன் தேனி 2ம் இடத்திலும், 440 வழக்குகளுடன் புதுக்கோட்டை 3ம் இடத்திலும் உள்ளன. மாவட்டங்களில் பதிவான வழக்குகள் மதுரை -514, திண்டுக்கல் -364, தேனி 465, ராமநாதபுரம் -257, சிவகங்கை -327, புதுக்கோட்டை -440, திருநெல்வேலி -309, துாத்துக்குடி -284, கன்னியாகுமரி - 81. உண்மையற்றவை எனக்கூறி வழக்குகளை ரத்து செய்த மாவட்டங்களில் 124 வழக்குகளுடன் புதுக்கோட்டை முதலிடத்திலும், 97 வழக்குகளுடன் 2ம் இடத்திலும், 74 வழக்குகளுடன் சிவகங்கை 3ம் இடத்திலும் உள்ளன. மதுரை -64, திண்டுக்கல் -40, தேனி -97, ராமநாதபுரம் -28, சிவகங்கை -74, புதுக்கோட்டை -124, துாத்துக்குடி- 39, திருநெல்வேலி -29, கன்னியாகுமரி -14. இம்மாவட்டங்களில் கடந்த நான்கரை ஆண்டுகளில் ஜாதிய ஆணவப்படுகொலை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த கேள்விகளுக்கு எந்த மாவட்டத்திலும் அப்படி எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ