உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிலக்கடலையில் நோய் மேலாண்மை

நிலக்கடலையில் நோய் மேலாண்மை

உலகளவில் எண்ணெய் வித்து பயிர்கள் உற்பத்தியில் இந்தியா மூன்றாமிடத்திலும் நிலக்கடலை உற்பத்தியில் முதலிடத்திலும் உள்ளது. இந்தியாவில் எண்ணெய் வித்து பயிர்களில் நிலக்கடலை 40 சதவீதம் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இதில் 47 முதல் 53 சதவீதம் எண்ணெய், 26 சதவீதம் புரதம் உள்ளது. தமிழகத்தில் 6.19 லட்சம் எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு 10.98 லட்சம் டன் உற்பத்தியாகிறது. மானாவாரியில் 70 சதவீதம் இறவையில் 30 சதவீதம் பயிரிடப்படுகிறது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உட்பட தென்மாவட்டங்களில் 56ஆயிரத்து 163 எக்டேரில் 84 சதவீத அளவு மானாவாரியில் சாகுபடியாகிறது.மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவிலும் தமிழகத்திலும் மகசூல் குறைவாக உள்ளது. தமிழகத்தில் சராசரி மகசூல் எக்டேருக்கு 1400 கிலோ. முன் ஆடிப்பட்டமான ஜூன், ஜூலை மற்றும் பின் ஆடிப்பட்டமான ஜூலை, ஆகஸ்டிலும் பயிரிடப்படுகிறது.

நோய் மேலாண்மை அவசியம்

நிலக்கடலையில் மானாவாரி மற்றும் இறவை பயிர்களில் டிக்கா இலைப்புள்ளி நோய் எல்லா மாநிலங்களிலும் பரவலாக காணப்படுகிறது. முன்பருவ, பின்பருவ இலைப்புள்ளி என இரண்டு வகைகள் பூஞ்சாணத்தால் பரவுகின்றன. முன்பருவ டிக்கா இலைப்புள்ளி நோய் அதிக சேதத்தை ஏற்படுத்தும். விதைத்த 30 நாட்களுக்கு பின் இந்நோய் தோன்றும். முதலில் இலைகளில் கருமைநிற வட்ட வடிவப்புள்ளிகள் சிறியதாக தோன்றும். நாளடைவில் புள்ளிகள் விரிவடைந்து பல புள்ளிகள் வரை தோன்றும். புள்ளிகள் ஒன்றோடொன்று இணைந்து ஒழுங்கற்ற வடிவமாக மாறும். சில நேரங்களில் இலைக்காம்பு, தண்டு, பூக்காம்பிலும் பூக்கும் பருவத்தில் இருந்து அறுவடை வரை நோயின் தீவிரம் அதிகமாக காணப்படும். நோய் தாக்கிய இலைகள் உதிர்ந்துவிடும், பூக்காம்புகளில் காய் பிடிப்பது பாதிக்கப்படும்.

பின்பருவ நோய்

முன்பருவ நோய் தோன்றி 30 நாட்களுக்கு பின் இந்நோய் தோன்றும். புள்ளிகள் பெரிதாக மஞ்சள் நிற வளையத்துடன் கருமை நிறமாக காணப்படும்.நோயால் பாதிக்கப்பட்டு கீழே கிடக்கும் இலைகள், செடியின் பாகங்களில் காணப்படும் பூஞ்சாண வித்துகளில் இருந்து நோய் உருவாகும். பூஞ்சாண வித்துகள் விதைகளில் மேற்பரப்பில் ஒட்டிக் கொண்டிருக்கும். விதை முளைக்கும் போது இளம்செடிகளை தாக்கி நோயை உருவாக்கும். தொடர்ந்து 3 நாட்கள் வரை 90 சதவீதத்திற்கும் அதிகளவு காற்றின் ஈரப்பதம் இருந்தாலும் தொடர்ந்து மழைத்துாறல் இருந்தாலும் நோய் பரவும். அதிகளவு தழைச்சத்து, மணிச்சத்தை பயிருக்கு இட்டாலும் நோயின் தாக்குதல் அதிகரிக்கிறது.இலைப்புள்ளி நோயை தாங்கி வளரும் ஆழியார் 1, டி 64, சி 501, எம்.எச்.4, டி.எம்.வி. 6, 10 ரகங்களை பயிரிடலாம். முன்பருவத்தில் விதைப்பதன் மூலம் நோய் தாக்குதலில் இருந்து பயிரைக் காக்கலாம். பெருங்காய கரைசலில் விதைநேர்த்தி செய்து விதைக்கலாம். நோய் தாக்கி நிலத்தில் கிடக்கும் இலைகள், செடி காம்புகளை எரிக்க வேண்டும். அறுவடைக்கு பின் நிலத்தை உழுது இலை, செடி, காம்புகளை மண்ணுக்கு அடியில் புதைக்க வேண்டும். பயிர் சுழற்சி முறையை பின்பற்ற வேண்டும். நிலக்கடலை பயிருடன் ஊடுபயிராக கம்பு அல்லது சோளத்தை 3 வரிசைக்கு ஒரு வரிசை அல்லது பச்சைப்பயறு 4 வரிசைக்கு ஒரு வரிசை வீதம் விதைத்து நோயின் தாக்கத்தை குறைக்கலாம்.விதைத்த 4 வாரத்தில் இருந்து 15 நாட்கள் இடைவெளியில் வேப்பிலைக்கரைசல் 5 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் அல்லது வேப்பெண்ணெய் ஒரு சதவீதம் தெளிக்க வேண்டும். அல்லது ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் திரம் அல்லது காப்டான் அல்லது மான்கோசெப் 4 கிராம் அல்லது 10 கிராம் சூடோமோனஸ் ஏதாவது ஒன்றை விதைப்பதற்கு 24 மணிக்கு முன்னேரே கலந்து அதன் பின் விதைக்க வேண்டும்.காற்று மூலம் நோய் பரவுவதை கட்டுப்படுத்த நோய் அறிகுறி தென்பட்டவுடன் ஏக்கருக்கு 200 கிராம் கார்பென்டாசிம் அல்லது 400 கிராம் மான்கோ செப் அல்லது 600 மில்லி எக்சானோசோல் அல்லது 200 மில்லி பிராப்பிகோனோசோல் திரவத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். அல்லது நனையும் கந்தகத்துாளை ஏக்கருக்கு 10 கிலோ வீதம் காலையில் பனியாக இருக்கும் வேளையில் துாவவேண்டும். டிரைகோடெர்மா விரிடி அல்லது வெர்டிசிலியம் லகானி 5 சதவீதம் தெளித்து நோயின் தீவிரத்தை குறைக்கலாம்.-சுதின் ராஜ் சோலைமலை எபனேசர் பாபு ராஜன் பாக்கியத்து சாலிகா பேராசிரியர்கள் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் கோவில்பட்டி அலைபேசி: 94420 29913


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை