| ADDED : நவ 21, 2025 04:17 AM
மேலுார்: மேலவளவில் பூட்டிக் கிடக்கும் கூட்டுறவு கடன் சங்கத்தால் பயிர்க்கடன் பெற முடியாமல் விவசாயிகள் அலைகழிக்கப்படுகின்றனர். மேலவளவு ஊராட்சியில் 9 கிராம மக்களுக்காக நாற்பதாண்டுகளுக்கு முன் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் துவங்கப்பட்டது. இதில் உறுப்பினரான விவசாயிகளுக்கு நகை, பயிர்க்கடன், உரம், இடுபொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்படும். இச்சங்கம் ஆறு மாதங்களுக்கும் மேலாக செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது : நிலம் எந்த கிராமத்தில் உள்ளதோ அதற்குரிய ஆவணத்தை அதே கிராமத்தில் உள்ள சொசைட்டியில் கொடுத்தால் மட்டுமே பயிர் மற்றும் நகைக் கடன் வழங்கப்படும். பிற கிராம சங்கங்களில் கடன் வழங்க மறுப்பதால் அலைக்கழிக்கப்படுகிறோம். எனவே, 10 கி.மீ., தொலைவில் மேலுாருக்குச் சென்று பயிர்க் கடன்களை கூடுதல் வட்டிக்கும், உரம், இடுபொருட்களை தனியார் உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு வாங்குகிறோம். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. விவசாயிகளின் நலம் கருதி கூட்டுறவு கடன் சங்கத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். கூட்டுறவு சங்க மதுரை மண்டல இணைப் பதிவாளர் சதீஷ் கூறுகையில், ''சொசைட்டி பூட்டிக் கிடப்பது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.