ரோடு சந்திப்பு மையங்களை உடனே சரிசெய்யுங்க ஆபீசர்ஸ்
மேலுார் : மேலுார் தாலுகாவில் அழகர் கோயில் செல்லும் ரோட்டில் காவிரி கூட்டு குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக தோண்டிய பள்ளத்தை சரிவர மூடாததால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.இத்தாலுகா முழுவதும் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகிக்க ஏற்கனவே இருந்த பிளாஸ்டிக் குழாய்களுக்கு பதிலாக இரும்புக் குழாய் பதிக்கும் பணி 7 மாதங்களுக்கு மேலாக நடக்கிறது. மேலுார் - அழகர் கோயிலுக்கு செல்லும் ரோட்டில் அரசு, தனியார் மருத்துவமனை, பள்ளி கல்லுாரி, கடைகள் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.இந்த ரோட்டில் குழாய்கள் பதித்த பள்ளத்தை சரிவர மூடவில்லை. மேலுார் மெயின் ரோட்டுக்கு மாற்றுப் பாதையாக பயன்படுத்தும் இந்தரோட்டை சரி செய்யாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.அப்பகுதியை சேர்ந்த ஜின்னா கூறியதாவது: அழகர் கோயில் ரோட்டில் 7,8, 9 வார்டுகள் சந்திக்கும் பகுதியில் மேடு, பள்ளமாக இருப்பதுடன், ஜல்லிக்கற்களும் வெளியே தெரிகிறது. அதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் தடுமாறி விழுகின்றனர். வாகனங்கள் விபத்துக்குள்ளாவது வாடிக்கையாக நடக்கிறது. வாகன துாசியால் மக்கள் சுவாசக் கோளாறு ஏற்பட்டு பாதிக்கின்றனர். ஆம்புலன்ஸ் விரைந்து செல்ல முடியாத நிலை உள்ளது. ரோடை சரி செய்யாததால் விபரீதம் நடக்கும் முன் அதிகாரிகள் மேலுாரில் குழாய் பதிக்கும் பணியை விரை முடிக்கவும், அதுவரை சந்திப்பு ரோடுகளை சீரமைத்து விபத்தை தடுக்க வேண்டும் என்றார்.குடிநீர் திட்ட அதிகாரிகள் கூறுகையில், ''உடனே சந்திப்பு மையங்களில் உள்ள பாதிப்புகள் சரி செய்யப்படும் என்றனர்.