| ADDED : பிப் 13, 2024 06:46 AM
மதுரை : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளை தாக்கி பற்களை அகற்றிய விவகாரம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.அம்பாசமுத்திரம் அருண்குமார் தாக்கல் செய்த மனு: எனக்கு எதிராக அம்பாசமுத்திரம் போலீசார் பொய் வழக்கு பதிந்தனர். சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கினர். எனது மற்றும் சில கைதிகளின் பற்களை ஏ.எஸ்.பி., பல்வீர் சிங் உட்பட சில போலீசார் அகற்றி சித்ரவதை செய்தனர். சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரிக்கின்றனர்.அம்பாசமுத்திரம் போலீசில் சம்பவத்தின்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி பதிவுகளை எனக்கு வழங்க வேண்டும். சித்ரவதை தொடர்பாக விசாரித்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதாவின் விசாரணை அறிக்கையை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.ஏற்கனவே விசாரணையின்போது நீதிபதி, 'போலீசார் சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். விசாரணை அதிகாரியின் அறிக்கையை மனுதாரருக்கு அரசு தரப்பில் வழங்க வேண்டும்,' என உத்தரவிட்டார்.நேற்று நீதிபதி ஜி.இளங்கோவன், 'கண்காணிப்பு கேமரா பதிவுகளை மனுதாரருக்கு போலீஸ் தரப்பில் வழங்க வேண்டும்,'என உத்தரவிட்டார்.