உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நெல்லையப்பர் கோயில் கடைகளை அகற்ற உத்தரவு

நெல்லையப்பர் கோயில் கடைகளை அகற்ற உத்தரவு

மதுரை : திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலிலுள்ள கடைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. துாத்துக்குடி மாவட்டம் சிவந்தகுளம் பாலசுப்ரமணியம் தாக்கல் செய்த பொதுநல மனு:திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் பழமையானது. இதன் மண்டபத்தில் அமைந்துள்ள கடைகளால், பழமையான கட்டமைப்புகள் சேதமடைகின்றன. கோயிலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும். கடைகளை அகற்ற அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நேற்று முன்தினம் விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு,'கடைகள் அமைக்க அனுமதித்தது ஏன் என்பது குறித்து திருநெல்வேலி அறநிலையத்துறை இணை கமிஷனர் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும், 'என உத்தரவிட்டது.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு நேற்று விசாரித்தது. அறநிலையத்துறை இணை கமிஷனர் கவிதா பிரியதர்ஷினி ஆஜரானார். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன்: கடைகளை காலி செய்ய ஏற்கனவே சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நெல்லையப்பர் கோயில் 7 ம் நுாற்றாண்டை சேர்ந்தது. இதை பல மன்னர்கள் தங்கள் ஆட்சியின்போது மேம்படுத்தியுள்ளனர். கடைகளில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் கோயில் கட்டமைப்பிற்கு பாதிப்பு ஏற்படும். அறநிலையத்துறை விதிகளுக்கு புறம்பாக கடைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு தெரிவித்தது. ஏற்கனவே கடைகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அறநிலையத்துறை தரப்பு தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்டோருக்கு விளக்கமளிக்க போதிய வாய்ப்பளித்து காலி செய்ய சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நடைமுறைகளை 12 வாரங்களில் மேற்கொள்ள வேண்டும். இதில் மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பாரதன்
ஆக 27, 2025 07:54

அனைத்து இந்து தர்ம வழிபாட்டு தலங்களிலும் உள்ளே இருக்கும் கடைகள் அகற்றப்பட வேண்டும். வழிபாட்டு தலங்களை முறையாக சரியாக பராமரிக்க வேண்டும். இந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும். ஆன்மிக பெரியவர்கள் இணைந்து ஒரு பொது அமைப்பு ஏற்படுத்தி கோயில்களை நிர்வாகம் செய்ய வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை