| ADDED : பிப் 04, 2024 05:37 AM
மதுரை : ''மறைந்த முதல்வர் அண்ணாதுரை நினைவிடத்தில் சசிகலாவை சந்தித்தது ஏன்,'' என்பதற்கு மதுரையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கமளித்தார்.விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தல் வாக்குறுதிகள் குறித்து மக்களிடம் தி.மு.க., கருத்து கேட்கிறது.ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை அக்கட்சி நிறைவேற்றவில்லை. புதிதாக கருத்துக்கள் கேட்டு என்ன செய்யப் போகிறார்கள் என மக்களிடம் குழப்பம் இருக்கிறது.அ.தி.மு.க., தொண்டர்களை ஒருங்கிணைப்பதற்கான வேலை நடக்கிறது. எங்களுடன் இணைந்து வருபவர்களிடம் பேச்சு வார்த்தை நடக்கிறது. அண்ணாதுரை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பும் வழியில் சசிகலாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு.அ.தி.மு.க., ஒருங்கிணைப்பில் முன்னாள் முதல்வர் பழனிசாமியை சேர்த்து கொள்வது குறித்து, அவர் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பதை நீங்கள் தான் கேட்டு சொல்ல வேண்டும். எங்களின் நிலைப்பாட்டை கூறி விட்டோம்.மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் போதுமானதாக இல்லை என கருத்து கூறுகின்றனர். இது இடைக்கால பட்ஜெட்தானே. தேர்தலுக்கு பின் முழுமையான பட்ஜெட் வரும் வரை நிதி கோரப்படுகின்ற பட்ஜெட்டாகத்தான் இதை பார்க்க வேண்டும் என்றார்.