பயன்பாட்டுக்கு வருமா பஸ்ஸ்டாண்ட் மேலுாரில் பரிதவிக்கும் பயணிகள்
மேலுார்: மேலுாரில் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் முடிந்தும், பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப் பொருளாக உள்ளதால், பயணிகள் ரோட்டிலும், தற்காலிக பஸ்ஸ்டாண்டிலுமாக மாறி மாறி காத்திருந்து பஸ்களில் பயணிக்கின்றனர்.மேலுாரின் மையப்பகுதியில் 1965 முதல் கர்னல் பென்னி குயிக் பெயரில் பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. இங்கு 18 கடைகள், பொருட்கள் வைப்பு அறை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் ரூ.6.60 கோடியில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிக்காக 2023 மார்ச் 4ல் பஸ்ஸ்டாண்ட் மூடப்பட்டது. பணிகள் முடியும் வரை நகராட்சி சார்பில் ஊருக்கு வெளியே தொலைவில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைத்தனர்.பஸ்ஸ்டாண்ட் பணிகள் முடிந்து 2 ஆண்டுகளாகியும், அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் தாமதம் செய்வதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.சமூக ஆர்வலர் ஸ்டாலின் கூறியதாவது: தற்காலிக பஸ் ஸ்டாண்ட் தொலைவில் உள்ளதோடு, சேறும், சகதியுமாக, சுகாதாரமற்ற முறையில் உள்ளது. பயணிகள் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அதனால் புதிதாக கட்டி வரும் பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே திறந்த வெளியில் கைக் குழந்தைகளுடன் பெண்கள் காத்து கிடப்பது பரிதாபமாக உள்ளது. அவர்கள் குடிநீர், கழிப்பறை வசதி இன்றி அவதிப்படுவதால் புதிய பஸ் ஸ்டாண்டை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.பொறியாளர் முத்துக்குமார் கூறுகையில், பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்காக முதலமைச்சரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளோம். விரைவில் திறக்கப்படும் என்றார்.