பாண்டியராஜபுரத்தில் வேண்டிய வசதி இல்லையாம் கழிவுநீரால் கதறும் மக்கள்
மதுரை : உள்ளாட்சித் தேர்தலில் பெத்தானியபுரம் வார்டு மூன்றாக பிரிக்கப்பட்டது. அன்று முதல் 64 வது வார்டு பாண்டியராஜபுர பகுதியில் குடிநீர் கிடைக்காமலும், அடிப்படை வசதிகளுக்கு பிற வார்டுகளை சார்ந்தும் உள்ளதாக மக்கள் மனம் வெதும்புகின்றனர். இங்குள்ள சர்வீஸ் ரோட்டில் மாநகராட்சி கழிப்பறை 3 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டிக்கிடக்கிறது. இதனால் பொது இடத்தில் இயற்கை உபாதையை கழிக்கின்றனர். கழிவு நீரேற்று நிலையத்தில் ஜெனரேட்டர் இல்லாததால் மின்தடை நேரத்தில் சாக்கடை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீரேற்றும் அரசரடியில் பிரஷர் பிரச்னை இருப்பதால், குடிநீர் வினியோகம் துவங்கிய முதல் ஒரு மணி நேரத்திற்கு கழிவு நீராகவே வருகிறது. அதை பயன்படுத்த முடிவதில்லை. சர்வீஸ் ரோடு பூங்காவில் உபகரணங்கள் பழுதடைந்துள்ளதால் குழந்தைகள் விளையாட முடியவில்லை.
ரேஷன் கடை இல்லை
அத்தியாவசிய பொருட்களுக்கு 63வது வார்டு ரேஷன் கடையைதான் சார்ந்துள்ளோம். பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் 2 கி.மீ., சென்றும் வெறுங்கையுடன் திரும்புகிறோம். ராஜாங்க வீதி சிந்தாமணி கால்வாய் முழுவதும் குப்பை நிரம்பி முகம் சுளிக்க வைக்கிறது. சாக்கடை மேன்ஹோலில் கழிவை கொட்டுவதால் அடைப்பு ஏற்படுகிறது. மாநகராட்சி பிடிக்கும் தெருநாய்களை மீண்டும் அதே இடத்திலேயே விடுவதால் எங்கள் குறைதீர்ந்தபாடில்லை. ராஜாங்க வீதி வைகை ஆற்றுப்பகுதியில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. - விஜயா மோதிலால் தெரு
சுகாதாரக்கேடு
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 2 கி.மீ., பாத்திமா நகர் செல்ல வேண்டும். பழுதடைந்த கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. கால்நடைகளின் சிகிச்சைக்கு பழங்காநத்தம், தல்லாகுளம் என 5 கி.மீ., அலைந்து திரிய வேண்டும். சிந்தாமணி கால்வாயில் குப்பை தேங்கியுள்ளதால் துார்வார வேண்டும். - துரைசெந்தில் குமரன் முனியாண்டி கோவில் தெரு
துரித நடவடிக்கை
வார்டில் கால்நடைகளை பாதுகாக்க காப்பகம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. அவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வசதியும் வர உள்ளது. போர்வெல், கழிப்பறை வசதிகளையும் சேர்த்தே கட்டித் தர உள்ளோம். சர்வீஸ் ரோடு கழிப்பறை மீண்டும் செயல்பட மாநகராட்சி கூட்டத்தில் குரல் எழுப்பியுள்ளேன். எஸ்.எம்.ஆர்., சத்யா தெருக்களில் ரூ.4.12 லட்சம் மதிப்பில் பேவர்பிளாக் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. முனியாண்டி கோயில் தெருவில் ரூ.9.20 லட்சம் மதிப்பில் சிமென்ட் ரோடு, முத்துராமலிங்கத் தெருவில் தார் ரோடு அமைத்துள்ளோம். சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கிறோம். கண்காணிப்பு கேமரா அமைக்க ஆலோசித்து வருகிறோம். வார்டில் தனி ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் அமைக்க கமிஷனரிடம் மனு அளிப்பேன். - சோலை ராஜா மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் அ.தி.மு.க.,