உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குவாரிக்கு எதிரானவர் கொலை வழக்கு குண்டாஸ் கைதிற்கு எதிரான மனு தள்ளுபடி

குவாரிக்கு எதிரானவர் கொலை வழக்கு குண்டாஸ் கைதிற்கு எதிரான மனு தள்ளுபடி

மதுரை: புதுக்கோட்டை மாவட்டத்தில் குவாரி விதிமீறல் தொடர்பாக புகார் அளித்த ஜெகபர் அலி கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து தாக்கலான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. திருமயம் அருகே வெங்களூர் ஜெகபர் அலி, 58. அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர். சமூக ஆர்வலர். திருமயம் பகுதியிலுள்ள சில கல்குவாரிகளுக்கு எதிராக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினார். உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். குவாரி நடவடிக்கைகளை தடை செய்யும் உத்தரவு பெற்றார். இதனால் குவாரி நடத்தும் சிலரின் மிரட்டலுக்கு ஆளானார். ஜன.17 ல் அப்பகுதி பள்ளிவாசலில் தொழுகை முடிந்து, டூவீலரில் வீட்டிற்கு சென்றபோது, எதிரே வந்த ​ டிப்பர் லாரி மோதி ஜெகபர் அலி இறந்தார். திருமயம் போலீசார் கொலை வழக்கு பதிந்தனர். கல் குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் தினேஷ்குமார், மற்றொரு குவாரி உரிமையாளர் ராமய்யா, லாரி உரிமையாளர் முருகானந்தம், லாரி டிரைவர் காசிநாதனை கைது செய்தனர். வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,போலீசாருக்கு மாற்றப்பட்டது. முருகானந்தம், ராமய்யா, ராசுவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிப்.22 ல் உத்தரவிட்டார். இதை ரத்து செய்யக்கோரி 3 பேர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார் ஆஜரானார். கைது உத்தரவு பிறப்பித்ததில் சட்டப்பூர்வ நடைமுறை மீறப்படவில்லை. மனுக்கள் பரிசீலனைக்கு தகுதியற்றவை. தள்ளுபடி செய்யப்படுகின்றன,' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை