| ADDED : டிச 10, 2025 05:47 AM
மதுரை: மதுரையில் அரையாண்டு தேர்வு நேரம் குறித்து நகர் - கிராம பள்ளி தலைமையாசிரியர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் நேரம் மாற்றியமைக்கப்பட்டது. கல்வித்துறை சார்பில் அரையாண்டு தேர்வு நடத்துவது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் ஆலோசனை கூட்டம் சி.இ.ஓ., தயாளன் தலைமையில் ஆன்லைனில் நடந்தது. டி.இ.ஓ.,க்கள் செந்தில்குமார் (மதுரை), கணேசன் (மேலுார்) பங்கேற்றனர். தலைமையாசிரியர்களுக்கு தேர்வு நடத்துவது தொடர்பான விதிமுறைகளை சி.இ.ஓ., விளக்கி, காலாண்டில் குறைந்த தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் தேர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்றார். அப்போது எம்.கல்லுப்பட்டி, பேரையூர், கள்ளிக்குடி உள்ளிட்ட பஸ் வசதி இல்லாத, மலைப் பகுதி கிராம பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், 'பிளஸ் 1 தேர்வு மதியம் 2:00 முதல் 5:00 மணி வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மாணவிகள் தேர்வு முடிந்து வீடுகளுக்கு செல்வதில் தாமதம் ஏற்படும். எனவே இப்பகுதிகளில் தேர்வை மதியம் 1:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்' என்றனர். அதற்கு டி.இ.ஓ., கணேசன், நகர்ப் பகுதி தலைமையாசிரியர்கள் சிலர் மறுப்பு தெரிவித்தனர். ஒரு பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நேரம் மாற்றி தேர்வு நடத்தினால் வினாத்தாள் 'அவுட்' ஆகும் வாய்ப்புள்ளது என நகர் - கிராம பள்ளி தலைமையாசிரியர்களிடையே விவாதம் ஏற்பட்டது. இதையடுத்து 'மாணவர்கள் நலன் கருதி அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 1 அரையாண்டு தேர்வை மதியம் 1:30 முதல் 4:30 மணி வரை நடத்த வேண்டும்' என சி.இ.ஓ., தயாளன் உத்தரவிட்டு, விவாதத்தை முடித்து வைத்தார்.