| ADDED : ஜன 13, 2024 03:57 AM
பொங்கல் பண்டிகையை யொட்டி ரேஷன் கடைகளில் இலவசமாக பச்சரிசி, வெல்லம், ரூ. ஆயிரம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதையொட்டி ரேஷன் பணியாளர்கள் அரிசி கார்டுதாரர்களுக்கு வீடுவீடாக டோக்கன் வழங்கினர். இதையடுத்து 2 நாட்களாக பொங்கல் தொகுப்பை ரேஷன் கடைகளில் வினியோகித்து வருகின்றனர்.நெருக்கடியை தவிர்க்க பகுதிபகுதியாக கடைகளில் வழங்கி வருகின்றனர். இருப்பினும் பொதுமக்கள் நீண்ட கியூவில் நின்று பொங்கல் பொருட்களை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் டோக்கன்பெற்ற சிலருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அவர்களிடம் ரேஷன் கடைதாரர்கள் நாளை வாருங்கள் என மீண்டும், மீண்டும் தெரிவிப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.மேலும் அரிசி கார்டுதாரர்கள் மட்டுமின்றி, சீனி மட்டும் பெறும் கார்டுதாரர்களுக்கும் பொங்கல்தொகுப்பு வழங்கப்படுவதாக செய்தி வெளியானதால் பலரும் ரேஷன் கடைகளில் முறையிடுகின்றனர். இதுபற்றிய குழப்பமும் உள்ளது.மாவட்ட வினியோக அலுவலர் முருகேஸ்வரி கூறியதாவது: அரிசி கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. சர்க்கரை கார்டுகளுக்கும் உண்டா என்று பலர் கேட்கின்றனர். இதுபற்றி எங்களுக்கு இதுவரை தகவல் வரவில்லை. அரசு உத்தரவிட்டால் வழங்கப்படும். தகுதியுள்ளோருக்கு கிடைக்கவில்லை என்றும் கூறுகின்றனர். முதலில் அரசு ஊழியர்,பென்ஷன் வாங்குவோருக்கு வழங்கவில்லை என்ற தகவல் வந்தது. இதனால் டோக்கன் வழங்கியபின் அவர்களை தவிர்த்து வழங்கினர். தற்போது அரிசி கார்டுள்ள அனைவருக்கும் உண்டு என்றதால், 2வது லிஸ்டில் விடுபட்டவர்களுக்கும் சேர்த்து வழங்கப்படும் என்றார்.