கொட்டாம்பட்டி வஞ்சிநகரில் சங்ககால குடியிருப்பு இருந்ததா அகழாய்வு செய்ய ஆய்வாளர்கள் மனு
மதுரை: கொட்டாம்பட்டி வஞ்சிநகரம் ஊராட்சியில் உள்ள மூவன் சிவல்பட்டி, நாகப்பன் சிவல்பட்டி, கள்ளங்காடு கிராமங்களில் பழங்கால பானை ஓடுகள், சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் இப்பகுதியை அகழாய்வு செய்ய பரிந்துரைக்க வேண்டும் என மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.உறுப்பினர் தமிழ்தாசன் கூறியதாவது: இக்கிராமங்களில் பலநுாறு ஏக்கர் பரப்பளவில் தொன்மையான கோயில் காடுகளும், தொல்லியல் மேடுகளும், பிற்கால பாண்டியர் கோயிலும் காணப்படுகிறது. பழமையான கற்திட்டை, குத்துக்கல், முதுமக்கள் தாழி உள்ளிட்ட ஏழு வகையான பெருங்கற்கால சின்னங்கள் நுாற்றுக்கணக்கில் இப்பகுதியில் காணப்படுகின்றன. மேலும் சிவப்பு நிற பானை ஓடுகள், சுட்ட செங்கற்கள், இரும்பு கசடுகள் படிந்த செங்காவி கற்கள் இருப்பதால் இவை சங்க காலத்தை சேர்ந்த குடியிருப்பு பகுதியாக இருக்கலாம்.அழகுநாச்சியம்மன் கோயில் காடு, பெருங்காட்டு கருப்பு கோயில் காடுகளில் தேவாங்கு, காட்டு பூனை, மரநாய், காட்டு முயல் உள்ளிட்ட 10 வகை பாலுாட்டிகள், புள்ளி ஆந்தை, செம்பருந்து, காட்டு கீச்சான், கதிர்குருவி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட பறவையினங்கள் ஆவணம் செய்யப்பட்டன. கடந்த மாதம் எங்கள் குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்து கண்டறிந்தோம். மேலும் கள்ளங்காடு பகுதியில் சிதிலமடைந்த நிலையில் 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர் மன்னர் கால சிவன் கோயில் உள்ளது. அங்காள ஈஸ்வரி உடனுறை அகளங்கேசுவரர் சிவன் கோயில் என்று மக்கள் அழைக்கின்றனர். 3000 ம் ஆண்டு முதல் 19ம் நுாற்றாண்டு வரை தொடர்ச்சியாக இப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன.இப்பகுதியின் வரலாற்று மற்றும் பல்லுயிரிய முக்கியத்துவம் கருதி கோயில் காடுகளை தமிழ்நாடு பல்லுயிரிய வகைமை சட்டத்தின் கீழ் பல்லுயிரிய மரபு தளமாக அறிவித்து தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். மேலும் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவித்து அகழாய்வு செய்ய வேண்டும். இதுதொடர்பாக கலெக்டர் சங்கீதாவிடம் மனு கொடுத்துள்ளோம் என்றார்.