| ADDED : மார் 11, 2024 06:09 AM
மதுரை: ரோடுகள் உயர்ந்ததால் பள்ளமான வீடுகள், தடுப்புச் சுவர் இல்லாத வாய்க்கால் பாலம், ஆபத்தை விளைவிக்கும் டிரான்ஸ்பார்மர், கூட்டமாக திரியும் நாய்களின் தொல்லை, சுகாதார மையம் இன்றி கஷ்டப்படும் பொதுஜனம் என மதுரை மாநகராட்சி 81 வார்டு ஜெய்ஹிந்த்புரம் மக்கள் அல்லோலப்படுகின்றனர்.பாரதியார் ரோடு, ஜெய்ஹிந்த்புரம் 1வது தெரு, என். எஸ். கோனார் வீதி, பாண்டியராஜன் தெரு, வடிவேல் தெரு, தேவர் நகர் 1 முதல் 3 தெருக்கள், என். எஸ். கே. 1 முதல் 4 தெருக்கள், விவேகானந்தர் தெரு, ஸ்டாலின் தெரு, நேதாஜி நகர் 1, 2 தெருக்கள், ஏ.ஜி.சுப்புராம் நகர் 1 முதல் 3 தெருக்கள் உள்ளிட்ட 42 குறுக்கு தெருக்களை இப்பகுதி கொண்டுள்ளது.இப்பகுதியின் வசதிக்குறைவு பற்றி பொதுமக்கள் கூறியதாவது:பாரதியார் தெரு விஜயா : எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை அமைத்து ஆண்டுகள் பல கடந்து விட்டது. தற்போது அதனை முறையாக பராமரிப்பதில்லை என்பதால், அடிக்கடி அடைத்துக் கொள்கிறது. மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தால் ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது என்கின்றனர்.இப் பகுதிகளில் உள்ளவர்கள் வீட்டு விசேஷங்களை நடத்துவதற்கு அதிக செலவு செய்து மண்டபம் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது.எனவே, இப்பகுதியில் ஒரு சமுதாய கூடம் தேவை என பலரும் பலமுறை வலியுறுத்தி விட்டோம். தெருக்களில் அதிகளவில் நாய்கள் உலா வருகின்றன. வெளியில் செல்லவே அச்சமாக இருக்கிறது.விவேகானந்தர் தெரு முத்து கருப்புசாமி: பாரதியார் மெயின் ரோட்டில் அதிக மின்னழுத்தம் உள்ள டிரான்ஸ்பார்மர் மிகவும் தாழ்வாக உள்ளது. விபத்து ஏற்படும் முன் அதனை உயரமான இடத்தில் வைக்க வேண்டும். பாரதியார் தெருவில் இருந்து குடிசை மாற்று வாரியம் செல்லும் வாய்க்கால் பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாமல் உள்ளது. இதனால் இரவில் வருவோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.இப்பகுதியில் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். புதிய சாலைகள் அமைக்க பழைய ரோடுகளைத் தோண்டி அதன்பின் புதிய சாலை அமைத்தால் வீடுகள் பள்ளமாகாது. அதனையும் முக்கிய கோரிக்கையாக வைத்துள்ளோம்.கவுன்சிலர் முருகன்: ஜெய்ஹிந்த்புரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, நேதாஜி நகர் 1வது தெருவில் உள்ள சத்துணவுக்கூடம், மூன்று ரேஷன் கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன. ஆரம்ப சுகாதார மையம் எங்கள் வார்டில் இல்லை. அதனை கொண்டுவர முயற்சி செய்து வருகிறேன்.பாரதியார் தெரு, குறுக்கு தெருக்களில் ரூ.36 லட்சத்திற்கு தார்ரோடு அமைத்துள்ளேன். எம்.பி. நிதியில் இருந்து பேவர் பிளாக் ரோடு ரூ.7 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளிக்கு ஆர்.ஓ., குடிநீர் திட்டம் கொண்டு வந்துள்ளேன்.மக்கள் குறைகளை தெரிவிக்க புகார் பெட்டிகளை வைத்துள்ளேன். தேவர் நகர் பகுதியினரின் கோரிக்கையான வீட்டுமனை பட்டா பெற தொடர்ந்து முயற்சிக்கிறேன் என்றார்.