உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  சாஸ்தா - புஷ்கலா திருக்கல்யாணம் கோலாகலம்

 சாஸ்தா - புஷ்கலா திருக்கல்யாணம் கோலாகலம்

ஆரியங்காவு: கேரள மாநிலம் ஆரியங்காவில் சாஸ்தா - புஷ்கலாதேவி திருக்கல்யாணம் நேற்றிரவு கோலாகலமாக நடந்தது. ஆரியங்காவில் தன்னில் தன்னை உணர்ந்து ஞானம் பெற்ற புஷ்கலா தேவியின் ஆத்ம பக்தியை மெச்சி, பகவான் அவரை தன் நிலைக்கு உயர்த்தி 'ஜீவன்முக்தி' என்ற உன்னத நிலையை வழங்கினார். சவுராஷ்டிராகுல சடங்குகள் அதன் வெளிப்பாடாகவே புஷ்கலா தேவி விருப்பப்படி பகவான் அவரை தன்னோடு ஐக்கியப்படுத்தி மணக்கோலத்தில் காட்சி தருகிறார். புஷ்கலா தேவி சவுராஷ்டிரா சமூகதேவி என்பதால் இங்கு நடக்கிற நிச்சயதார்த்தம், ஊஞ்சல் உற்ஸவம், திருக்கல்யாண சடங்குகள் அனைத்தும் சவுராஷ்டிரா குலமுறைப்படி நடக்கிறது. டிச.,24 ல் மாம்பழத்துறையில் அம்பாளை ஜோதி ரூபத்தில் ஆவாஹனம் செய்து அழைத்து வந்தனர். டிச.,25 ல் ஆரியங்காவு ராஜகொட்டாரத்தில் பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று இரவு திருக்கல்யாணம். இதை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. மூலவருக்கும், உற்ஸவ மூர்த்திகளுக்கும் அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தன. காலை 9:00 மணிக்கு அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் வஸ்திர சாத்துபடி, பொங்கல் படைப்பு நடந்தது. 11:00 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவம், மாலை 4:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தன. இரவு 7:00 மணிக்கு பகவான் காளை வாகனத்திலும், அம்பாள் பூங்கோவில் வாகன சப்பரத்திலும் எழுந்தருளியிருந்தனர். பகவான் சப்பரத்தை அம்பாள் சப்பரம் 3 முறை வலம் வந்து, எதிரெதிரே நின்றன. பின் மாலை மாற்றும் வைபவம் நடந்தது. இருசப்பரங்களும் ஒன்றாக கோயிலை வலம் வந்து திருக்கல்யாண மண்டபம் சேர்ந்தன. கோலாகல திருக்கல்யாணம் சாஸ்தா கோயில்களில் இங்கு மட்டுமே திருக்கல்யாண மண்டபம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மண்டபத்தில் சவுராஷ்டிரா குல வழக்கப்படி பகவான் அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவித்து, மங்கல குலவைகள் முழங்க, சரணகோஷங்களுக்கு இடையே திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. கோகுலத்து மடம் தந்திரி சம்பு போத்தி முன்னிலையில் தென்காசி சிவாச்சாரியார் சதாசிவம் அய்யர் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். பொதுச் செயலாளர் எஸ்.ஜெ.ராஜன் தொகுத்து வழங்கினார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (டிச.,27) மண்டல பூஜையை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். மதியம் 12:00 மணிக்கு பகவானுக்கு கலசாபிஷேகம், களபாபிஷேகம், மதியம் 1:00 மணிக்கு சர்வராஜ அலங்காரத்தில் தீபாராதனையுடன் மண்டல கால பூஜைகள் நிறைவுபெறும். திருக்கல்யாண உற்ஸவதாரர் கே.ஆர்.ஹரிகரன், ஊஞ்சல் உற்ஸவதாரர் டி.எஸ்.ஆனந்தம், வஸ்திரசாத்துபடி உற்ஸவதாரர் எஸ்.ஜெ.கண்ணன், பொங்கல் படைப்பு உற்ஸவதாரர் எஸ்.கே.ரவிச்சந்திரன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி