ஆடுகள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
பேரையூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். பேரையூர் பகுதியில் விவசாயிகள் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஆடு, மாடு வளர்ப்பில் அதிக கவனம் செலுத்துகின்றனர். குறைந்த நாட்களில் நிறைந்த லாபமான தொழில் என்பதால் ஆடுகளை வளர்க்கின்றனர். தீபாவளி பண்டிகைக்காக வியாபாரிகள் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று ஆடுகளை விலைக்கு வாங்கி வருகின்றனர். ஆடுகளின் எடையை பொறுத்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலைக்கு வாங்குகின்றனர். சென்ற மாதம் ஆடு உயிருடன் எடை போட்டு கிலோ ரூ.700க்கு வாங்கினர். 2 நாட்களாக கிலோ ரூ.800 முதல் ரூ.900 வரை விலை கொடுத்து வாங்கினர். ஆடு வளர்ப்போர் கூறியதாவது: விவசாயத்தை மட்டும் நம்பி இருந்தால் நஷ்டமே மிஞ்சுகிறது. விவசாயத்தையும், ஆடு வளர்ப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஆடு வளர்ப்பால்தான் நல்ல வருவாய் கிடைக்கிறது. பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு இத்தொகை பயன்படுகிறது. ஆடுகள் ஆண்டுக்கு 2 தடவை ஈனும் என்பதால், அவசரத்திற்கு இருக்கும் ஆடுகளை விற்று கொள்ளலாம். தற்போது தீபாவளி நெருங்குவதால் வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். இதனால் எங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது என்றனர்.