அரசு பள்ளிகளில் வாசிக்க தெரியாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்; ஆசிரியர்கள் ஒதுக்கீட்டில் சிக்கல்
மதுரை : தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் வாசிக்க தெரியாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில் அதற்காக ஆசிரியர் ஒதுக்கீடு செய்வதில் தலைமையாசிரியர்கள் திண்டாடுகின்றனர்.மாநில அளவில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு எழுதும், வாசிக்கும் திறன், அடிப்படை கணிதத்திறன் குறைவாக உள்ளது ஆய்வில் தெரிய வந்தது. இதற்கு தீர்வாக அவர்களை கண்டறிந்து சிறப்பு வகுப்பு நடத்தும் வகையில் 'போக்கஸ்டு லேனர்ஸ்' திட்டம் கொண்டு வரப்பட்டது. இம்மாதம் (ஜூலை) முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 9 ம் வகுப்பு வரை இத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதற்காக 'எமிஸ்' தளத்தில் 'போக்கஸ்டு லேர்னர்ஸ் கிளாஸ்' என்ற தலைப்பில் அதுதொடர்பான விவரங்களை பதிவேற்றம் செய்ய அனைத்து சி.இ.ஓ.,க்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்காக ஆசிரியர்கள் ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் நீடிப்பதாக தலைமையாசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து தலைமையாசிரியர்கள் கூறியதாவது: 6 முதல் 9ம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது 20 சதவீதம் பேர் எழுதவும், படிக்கவும் திணறுகின்றனர். இவர்களை மெல்ல கற்கும் மாணவர்கள் என குறிப்பிடுகின்றனர். இவர்களை ரெகுலர் மாணவர்களில் இருந்து பிரித்து சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு செய்யும் போது உளவியல்ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். ஆசிரியர்கள் அனைவருக்கும் ரெகுலர் வகுப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வகுப்பு இல்லாத ஆசிரியர்கள் சிறப்பு வகுப்பில் கற்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால் பல பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளுக்கு பாடவாரியான ஆசிரியரை ஒதுக்க முடியவில்லை. சிறப்பு வகுப்பு நடத்தி முடித்த ஆசிரியர்கள் மீண்டும் ரெகுலர் வகுப்பை கவனிக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே கற்பித்தலை தவிர எமிஸ் பதிவேற்றங்கள், 20க்கும் மேற்பட்ட மன்றச் செயல்பாடுகளை நடத்துவது உள்ளிட்ட பணிகளால் மனஉளைச்சலில் தவிக்கின்றனர். எனவே சிறப்பு வகுப்புகள் நடத்த கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும் அல்லது இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பயன்படுத்த அரசு ஆலோசிக்க வேண்டும் என்றனர்.