| ADDED : நவ 24, 2025 06:49 AM
மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவ.28ல் துவங்கும் உலககோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் சர்வதேச வீரர்கள் மதுரையின் சிறப்பை உணரும் வகையில் டிச.,5 ல் ஜல்லிக்கட்டை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்தார். அவர் கூறியதாவது: மதுரையில் 12 நாட்கள் இப்போட்டி நடக்கிறது. வீரர்களுக்கு மதுரையின் முக்கிய சுற்றுலாத் தலங்கள், விளையாட்டு அலுவலர்கள், அவசர எண்கள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய பாக்கெட் டைரி வழங்கியுள்ளோம். மாநகராட்சி மூலம் ஆயிரம் கொள்ளளவு உடைய நான்கு குடிநீர் தொட்டிகள் அமைத்துள்ளோம். தற்காலிக பார்வையாளர் அரங்கிற்கு பின்புறம் நடமாடும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. ஹாக்கி மைதானத்தை பராமரிக்க தினமும் 40 ஆயிரம் லிட்டருக்கும் மேற்பட்ட தண்ணீர் தேவைப்படுவதால், நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்த ஏற்பாடு செய்துள்ளோம். போட்டிகளின் இடைவெளியின்போது மதுரையின் பாரம்பரிய தலங்கள், சிறப்பு தகவல்களை ஒளிபரப்பப்பட உள்ளது. மெகா எல்.இ.டி., திரையிலும் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இ-டிக்கெட் உள்ள பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அலங்காநல்லுார் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கில் டிச.,5ல் ஹாக்கி வீரர்களுக்காக சிறப்பு ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. கீழடி அருங்காட்சியத்திற்கும் அழைத்து செல்ல உள்ளோம் என்றார். போலீஸ் கமிஷனர் லோகநாதன் கூறியதாவது: 200 பஸ்கள், 760 கார்கள், 3 ஆயிரம் டூவீலர்களை நிறுத்த பார்க்கிங் வசதி செய்துள்ளோம். விளையாட்டு வீரர்களுக்கு தனி பாதுகாப்பு, மைதானத்திற்கு அழைத்துச் செல்ல பிரத்யேக வழி ஏற்பாடு செய்துள்ளோம். கூடுதல் பார்வையாளர்கள் வந்தாலும் சமாளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார். துணை கமிஷனர் அனிதா, ஹாக்கி இந்தியா நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஹாக்கி பார்க்க எப்படி புக் செய்வது
பார்வையாளர்கள் 'ticketgenie' என்ற ஆப் மூலம் பதிவு செய்து போட்டிகளை இலவசமாக நேரில் கண்டுகளிக்கலாம். இந்த ஆப்பில் கேலரி இருக்கையை தேர்வு செய்யலாம். பெயர், அலைபேசி எண், இமெயில் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்து டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். தனக்கான டிக்கெட்டை நண்பர்களுக்கு அனுப்பும் வசதியும் உள்ளது.