உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பதவி உயர்வுக்கு இடையூறான குற்றச்சாட்டு குறிப்பாணைகள் வேதனை தீருமா என நிலஅளவர்கள் எதிர்பார்ப்பு

பதவி உயர்வுக்கு இடையூறான குற்றச்சாட்டு குறிப்பாணைகள் வேதனை தீருமா என நிலஅளவர்கள் எதிர்பார்ப்பு

மதுரை: தமிழக நிலஅளவைத் துறையில் பதவி உயர்வை அனுபவிக்க தடையாக உள்ள குறிப்பாணையை ரத்து செய்ய நிலஅளவர்கள் எதிர்பார்க்கின்றனர்.இத்துறையில் நிலஅளவர், குறுவட்ட அளவர், சார் ஆய்வாளர், வரைவாளர், வட்ட ஆவண வரைவாளர், முதுநிலை வரைவாளர் என 3600க்கும் மேற்பட்டோர் களஅலுவலர்களாக பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு பதவி உயர்வுக்கான துறைத்தேர்வு கடந்த டிசம்பரில் நடந்தது. முடிவு ஏப்ரலில் வெளியானது. இந்நிலையில் ஊழியர்களின் பதவி உயர்வு பட்டியலை வெளியிட துறை இயக்குனர் மதுசூதனன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதன்படி 500க்கும் மேற்பட்டோர் பதவி உயர்வுக்கு தயாராக உள்ளனர். அதேசமயம் இவர்களில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் மீது குற்றக்குறிப்பாணை (17 ஏ மற்றும் பி) மற்றும் தண்டனைகள் உள்ளதால் பதவி உயர்வை பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்துறையில் காலியிடங்கள் அதிகம் உள்ளன. சிலமாதங்களுக்கு முன் வரை பட்டா, சர்வே தொடர்பான பொதுமக்களின் 9 லட்சத்துக்கும் மேலான மனுக்கள் நிலுவையில் இருந்தன. அரசின் நடவடிக்கையால் அவை ஒரு லட்சமாக குறைந்தன. இதனால்தான் '30 நாட்களுக்குள் பட்டா மாறுதல் அளிக்கப்படும்' என முதல்வர் ஸ்டாலினால் அறிவிக்க முடிந்தது. காரணம் கீழ்நிலை நிலஅளவர்களே. உயதிகாரிகளின் ஆய்வின் போது நிலுவை மனுக்களை காரணம் காட்டியே இந்த ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது. அதுவே அவர்களின் பதவி உயர்வுக்கு தடையாக உள்ளது. அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் துரைப்பாண்டி கூறுகையில் ''குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்து பதவி உயர்வு அளிக்க வேண்டும். இந்த அலுவலர்கள் களப்பணியாற்றியதால்தான் நிலுவை மனுக்களின் எண்ணிக்கை குறைந்தது. இதுகுறித்து இயக்குனரிடம் மனு கொடுத்தும் குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்யாததால் நிலஅளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ