இயேசு பிறப்பு உலகுக்கான நற்செய்தி
உ லகெங்கும் வாழும் மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் கிறிஸ்து பிறந்த நாளில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கிறிஸ்துவின் பிறப்பு வெறும் செய்தி அல்ல. இப்பிறப்பு உலகுக்கு அளிக்கப்பட்ட நற்செய்தி. உலகில் மானுட மகனாய் உருவெடுத்து, உலகிற்கு ஒளியூட்டியவர் இவர். புத்துலகை படைத்த பெரியவர் இவர். இவர் பிறந்தநாளை உலகோர் கொண்டாடுவது என்பது வெறும் அடையாளம் அல்ல. இக்கொண்டாட்டத்தின் ஒவ்வொரு பரிமாணமும் அர்த்தம் உள்ளவை. கனித்த உள்ளடக்கத்தால் செறிந்தவை ஆகும். பூவுலகின் வரலாற்றைப் புரட்டிப் போட்ட இயேசுவின் பிறப்பில் உலகு சந்தித்த அதிசயங்கள் பல; விந்தைகள் பல; கிறஸ்துவின் தோற்றத்திற்குப் பின் உருவான மானுட வளர்ச்சி நோக்கில் உருவான அனைத்து சிந்தனை வடிவங்களிலும், கருத்தியல் புரட்சிகளிலும் இயேசு தந்த நற்செய்தியின் சாயல் உண்டு. நற்செய்தியின் உருவகமாய் நின்ற இயேசு, இன்றைய உலகின் அனைத்து தேவைகளுக்கும் பரிகாரியாய் இருப்பது போல, எழும் அனைத்துப் பிரச்னைகளின் விடியலுக்கும் வழிகாட்டும் நெறியாளராகவும் உள்ளார். இந்தியாவில் கிறிஸ்தவம் இயேசுவின் சீடருள் ஒருவரின் காலத்தில் உருவான ஒன்று. எண்ணிக்கையில் கிறிஸ்தவம் ஒரு மறை என்ற நிலையில், சிறுபான்மையினரை உள்ளடக்கியதாக இருப்பினும், இந்திய கிறிஸ்தவம் அதன் எண்ணிக்கையையும் கடந்து நாடு முழுவதும் அதன் அரிய மானுடப்பணியாய் தன்இருப்பை நிலை நிறுத்தியுள்ளது. இயேசு காட்டிய சமத்துவம், சகோதரத்துவம், இறையாண்மை என்பனவெல்லாம் இந்திய சமூகத்தின் வழிகாட்டு நெறிகளாக இருப்பது கண்கூடு. இந்திய கிறஸ்தவம், தன் தனித்த அடையாளங்களைக் காத்துக் கொள்ள உறுதி கொண்டிருந்தாலும், அனைத்து சமூகங்களோடும், அனைத்து சமயங்களோடும் நட்புறவு கொள்ளவும், அதன்மூலம் சமூக நல்லிணக்கத்த பேணவும் உறுதியேற்கிறது. கிறிஸ்து முன்வைத்த மக்களின் மேன்மையை, வாழ்நெறியாக்குவதை உறுதியுடன் செயற்படுத்த முன்னிற்க துணிவோம். உலகில் தோன்றி உலகுக்காய் வாழ்ந்து மடிந்த இயேசு பிறந்தநாளில், இவர் பிறப்பை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். -அந்தோணி சவரிமுத்து கத்தோலிக்க பிஷப், மதுரை உயர்மறை மாவட்டம்