இரும்புத் துகள் கலந்த நீரை பருகுவதாக வேதனை
கொட்டாம்பட்டி : கச்சிராயன் பட்டி, கே.புதுாரில் சிதிலமடைந்த மேல்நிலைத் தொட்டி மூலம் சப்ளையாகும் தண்ணீரில் இரும்புத் துகள் கலந்து வருவதால் மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி உள்ளது.கே. புதுாரில் வசிக்கும் 700 க்கும் மேற்பட்டோருக்கு குடிநீர் வினியோகிக்க 21 ஆண்டுகளுக்கு முன் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. இத்தொட்டியில் போர்வெல், காவிரி தண்ணீர் இரண்டையும் நிரப்பி வினியோகம் செய்கின்றனர். தொட்டியின் துாண்கள், மூடியின் உட்பகுதி முழுவதும் சிதிலமடைந்துள்ளது.அப்பகுதியை சேர்ந்த அழகு கூறியதாவது : துாண்களில் வெடிப்பு ஏற்பட்டு தொட்டி சாயும் நிலையில் உள்ளது. தொட்டி மூடியின் உள்பகுதியில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் துருப்பிடித்து தண்ணீருக்குள் உதிர்கிறது. இதனால் இரும்புத் துகள் கலந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனை பருகுவோரின் ஆரோக்கியம் பாதிக்கிறது. ஊராட்சி நிர்வாகம், கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும், பி.டி.ஓ., விடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தொட்டி உடைந்து விபரீதம் நிகழும்முன் புதிய தொட்டி கட்டுவதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.பி.டி.ஓ., ராமமூர்த்தி கூறுகையில், ''ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.