| ADDED : பிப் 14, 2024 04:56 AM
திருமங்கலம், : 'உள்ளாட்சி மன்றங்களுக்கான வளர்ச்சிப் பணிகளை மாவட்ட அளவிலேயே டெண்டர் விட்டு இறுதி செய்யப்படுமானால், ஒன்றிய நிர்வாகத்தையே கலைத்துவிடலாமே' என கவுன்சிலர்கள் விரக்தியடைந்துள்ளனர்.ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள், பொதுமக்கள், கிராமங்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திட்டமிட்டு கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்புவர். அவற்றை சரிபார்த்து மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கிய பின், ஒன்றிய அலுவலகத்தில் இருந்து டெண்டர் கோரப்பட்டு பணிகள் நடைபெறும்.திருமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்புகின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் பணம் ஒதுக்கீடு செய்து மாவட்ட அளவிலேயே டெண்டர் விட்டு ஒப்பந்தம் செய்யப்படுவதால், என்னென்ன பணிகள் நடக்கிறது, எவ்வளவு நிதி ஒதுக்கீடு, யார் செய்கிறார்கள் என்பது போன்ற விவரங்கள் கூட தெரியாமல் கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் உள்ளனர்.இதனால் கிராமங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை முழுமையாக செயல்படுத்த இயலாமல் உள்ளனர். இதில் விரக்தியடைந்த திருமங்கலம் ஒன்றியத்தின் அனைத்து (அ.தி.மு.க., 12, தி.மு.க., 3, தே.மு.தி.க., 1) கவுன்சிலர்களும் புலம்பி வருகின்றனர். மாவட்ட அளவிலேயே அனைத்து பணிகளும் இறுதிச் செய்யப்படுமானால் நாங்கள் எதற்கு... ஒன்றிய கவுன்சிலர்கள் தலைவர் என்ற பதவி எதற்கு... இவற்றையும் கலைத்து விட்டால், பொதுமக்களிடம் நாங்கள் பதில் சொல்லும் இடத்தில் இருந்தாவது தப்பித்துக் கொள்வோம் என தெரிவித்தனர்.