| ADDED : பிப் 23, 2024 06:25 AM
உசிலம்பட்டி: வாலாந்துார் - சக்கிலியங்குளம் இடையே ஜனவரியில் ரூ.70.65 லட்சத்தில் ரோடு அமைத்ததாக கூறிய அதிகாரிகள், பணிகள் முடியவில்லை என பொதுமக்கள் புகார் கொடுத்ததால், பிப்ரவரியில் ஒரே நாளில் ரோட்டை அமைத்துக் காட்டினர்.சக்கிலியங்குளத்திற்கு மதுரை-தேனி ரோடு பிரிவு மற்றும் வின்னக்குடி ரோட்டில் இருந்து கால்வாய் ஓரமாக என 2 ரோடுகள் உள்ளன. இவற்றை புதுப்பித்து தரும்படி முதலமைச்சர் குறைதீர் பிரிவிற்கு கிராமத்தினர் மனு செய்தனர். இதையடுத்து முதல்வர் கிராம சாலைத் திட்டத்தின் கீழ் ரூ.70.65 லட்சத்தில் கால்வாய் ஓரமாக தார்சாலை அமைக்கப்பட்டது.மற்றொரு சாலை ரயில்வே கிராசிங்கை கடப்பதற்கு ரயில்வே துறையை அணுக வேண்டும் என, செல்லம்பட்டி ஒன்றிய பி.டி.ஓ., குறைதீர் பிரிவுக்கு தகவல் தெரிவித்தார். அதேசமயம் கால்வாய் ஓரமாக அமைத்த தார்சாலை பணி முழுமையடையாமல் இருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் குறைதீர் பிரிவுக்கு புகார் அனுப்பினர். இதையடுத்து பிப். 19 ல் ஒரேநாளில் தார்சாலையை அமைத்தனர்.சக்கிலியன்குளம் குபேந்திரன் கூறுகையில், ''கால்வாயோரம் 1.5 கி.மீ., ரோடு பணி முடியாத நிலையில், பணிகள் முடிந்து விட்டதுஎன, அதிகாரிகள் பதில் கொடுத்தனர். அங்கு பாதி வேலை தான் நடந்துள்ளது என மக்கள் புகார் கொடுத்ததால், நேற்று முன்தினம் ஒரே நாளில் தார்சாலையை அமைத்து விட்டனர்'' என்றார்.