| ADDED : டிச 22, 2025 05:36 AM
பாலமேடு: ஜல்லிக்கட்டு களத்தில் ஆக்ரோஷமாக சீறிப் பாயும் காளைகள், பிடிக்க வரும் வீரர்களை கொம்புகளால் குத்தி பறக்க விடுகின்றன. அதேநேரம் இத்தனை ஆக்ரோஷ காளைகள், வீடுகளில் உள்ளோரிடம் அன்பை அதிகம் பகிரும் செல்ல பிள்ளைகளாக, குடும்பத்தில் ஒருவராக வளர்க்கப்படுகின்றன. பாலமேடு வடக்கு தெரு ஜெயராமன், மஞ்சுளா தேவியின் 2வது மகள் அழகுப்பிரியா வளர்க்கும் காளைக்கு சீலைக்காரி அம்மனை குறிப்பிடும்படி 'சித்தா' மற்றும் 'ராமு'என பெயர் சூட்டி வளர்த்து வருகின்றனர். கடந்த 2021ல் வளர்த்த முந்தைய 'துருவன்' காளைக்கு பாலமேட்டில் சிறந்த காளையாக தேர்வானதற்கு பரிசாக கன்றுடன் காங்கேயன் நாட்டு பசு கிடைத்தது. அதன் வாரிசுகளையும் வளர்த்து போட்டிக்கு தயார்படுத்தி வருகிறார். அழகுபிரியா கூறியதாவது: வாடியில் இருந்து 'சித்தா' எகிறி குதித்து கெத்து காட்டுவான், தொட முயலும் வீரர்களை பின்னங்கால்களால் எட்டிஉதைப்பான். என் பெற்றோருக்கு நாங்கள் 2 மகள்கள், எனவே ஆண் வாரிசாக சித்தா, ராமு உள்ளனர். எங்கள் நாட்டு பசு ராமாயியின் வாரிசு பசுங்கன்று பொம்மு, பார்வதி, காளை கன்றுகள் சாய், அழகர் என அனைத்துக்கும் சுவாமி பெயர் தான். ஒவ்வொருவரிடமும் ஒரு காளை செல்லப் பிள்ளையாக பழகும். என் மகள்களிடம் அன்புகாட்டும் காளைகள் அவர்களிடம் பிஸ்கட், வாழைப்பழம், கடலை மிட்டாய், தோசை, புரோட்டா வாங்கி உண்ணும். தனது தோற்றம், தோரணையை மறந்து அன்பாக தொந்தரவு செய்யும் அழகே தனி. சித்தா காளை ஆரம்பத்தில் அதிக முரண்டு பிடிப்பான். அப்பா, சகோதரர்களுடன் நானும் சென்றால் தான் வாடிவாசலுக்கு அமைதியாக வருவான். அவனை நான்தான் தொடர்ந்து அவிழ்த்து வருகிறேன். அனைத்து போட்டியிலும் வெற்றிதான். அடுத்தடுத்த ஆண்டுகளில் நான் வளர்க்கும் காளைகள் களம்காண்பர் என்றார்.