| ADDED : பிப் 14, 2024 02:14 AM
உசிலம்பட்டி:உசிலம்பட்டியில் காக்கா முட்டை, கடைசி விவசாயி' திரைப்படங்களின் இயக்குனர் மணிகண்டன் வீட்டில் திருடிய தேசிய விருதுகளை, 'உங்கள் உழைப்பு உங்களுக்கு' என்று மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து, அவற்றை திருப்பி வைத்த, 'மனிதாபிமான' திருடர்களை போலீசார் தேடுகின்றனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இயக்குனர் மணிகண்டன். இவரது வீடு, அலுவலகம் உசிலம்பட்டி -- தேனி ரோடு எழில் நகரில் உள்ளது.கடந்த 8ல் இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் 1 லட்சம் ரூபாய், 5 சவரன் நகை, கடைசி விவசாயி படத்திற்கு கிடைத்த வெள்ளியிலான 2 தேசிய விருதுகளை திருடிச் சென்றனர்.உசிலம்பட்டி போலீசார் விசாரித்தனர்.இந்நிலையில், கடந்த 11ம் தேதி இரவு, 2 தேசிய விருதுகளையும், 'அய்யா எங்களை மன்னித்து விடுங்கள். உங்கள் உழைப்பு உங்களுக்கு' என்று எழுதிய கடிதத்துடன், வீட்டின் முன் வைத்துச் சென்று விட்டனர்.