உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மதுரை விமான நிலையத்தில் உடனடி விசா பெறும் வசதி இல்லை

 மதுரை விமான நிலையத்தில் உடனடி விசா பெறும் வசதி இல்லை

மதுரை: உடனடி விசா எடுக்கும் வசதி இல்லாததால், வெளிநாடுகளில் வேலை பார்க்கும் தென்தமிழக தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் மதுரை விமான நிலையத்திற்கு பதிலாக கோவை, திருச்சி விமான நிலையங்களை தேர்ந்தெடுக்கின்றனர். ஏர்இந்தியா விமானம் மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு முழுவதும் நிரம்பிய இருக்கைகளுடன் செல்கிறது. திரும்ப வரும் போது மதுரையில் உடனடி விசா பெறும் வசதி இல்லாத காரணத்தால் 20சதவீத இருக்கைகள் மட்டுமே நிரம்புகிறது. இன்னமும் சுங்க (கஸ்டம்ஸ்) விமானநிலையமாக மட்டுமே உள்ளது. பன்னாட்டு சேவை என்று அறிவிக்கப்பட்டால் மதுரை விமான நிலையத்திலேயே விசா எடுக்க முடியும். சிங்கப்பூர், மலேசியா உட்பட பிறநாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் கோவை, திருச்சி விமான நிலையத்தில் இறங்கிய பின் அங்கேயே விசா எடுக்க முடியும். மதுரை வரவேண்டுமெனில் அந்தந்த நாட்டு துாதரகத்தில் முன்கூட்டியே இந்திய விசா எடுத்தபின்பே, மதுரைக்கு விமானத்தில் பயணிக்க முடியும். இதுவே சுங்க விமான நிலையம் என்பதற்கான சான்று. இதனால் தான் வெளிநாடுகளில் இருந்து மதுரை வந்திறங்கும் பயணிகளின் எண்ணிக்கை குறைகிறது. மதுரையில் இருந்து 100 சதவீத பயணிகளுடன் சென்றாலும் வெளிநாட்டில் இருந்து மதுரை திரும்பி வரும் போதும், அதே அளவு இருக்கைகள் நிரம்பினால் தான் விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்க முன்வரும். திரும்பி வரும் போதும் 20 சதவீத இருக்கைகளே நிரம்பினால் நஷ்டத்தை காரணம் காட்டி நிறுவனங்கள் தங்களது சேவையை நிறுத்திவிடும். இந்த காரணத்தை முழுமையாக ஆராய்ந்தால் தான் மதுரையை, பன்னாட்டு விமான நிலையமாக மாற்றாததன் காரணத்தை புரிந்து கொள்ள முடியும். ரன்வே போதுமானது மதுரை விமான நிலைய மேம்பாட்டிற்காக குரல் எழுப்பி வரும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: பெயருக்கு தான் மதுரை விமான நிலையம் செயல்படுகிறதே தவிர முக்கிய சேவைகள் கிடைக்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது.தென் மாவட்டங்களைச் சேர்ந்த 40 லட்சம் பேர் வெளிநாடுகளில் வேலை பார்க்கின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை இவர்கள் சொந்தஊர் வந்து செல்வது என்றாலும் கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி அல்லது தமிழகத்தில் திருச்சி, கோவை விமான நிலையங்களில் இறங்கிய பின்பே சொந்தஊருக்கு செல்கிறார்கள். மீண்டும் வேலைக்குச் செல்லும் போதும் இதே நிலைமை தான். மதுரை விமான நிலையத்தில் தற்போதுள்ள ரன்வே நீளம் 7500 அடி. இதைவிட சற்றுக் குறைவான அடி நீளமுள்ள திருச்சி ரன்வேயில் இருந்து சார்ஜா, துபாய்க்கு தினமும் 3 விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே ரன்வே விரிவாக்கத்திற்கு முன்பாகவே மதுரையில் போயிங், ஏர்பஸ் போன்ற பெரிய விமானங்கள் இறங்கமுடியும். சுற்றுலா பயணிகள் மதுரை வருவதற்கும் விசா வசதியே தடையாக உள்ளதால் பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ