உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு  பசுமையாக்க போறாங்க; விண்ணப்பித்தால் வீடுதேடி வருவாங்களாம்

மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு  பசுமையாக்க போறாங்க; விண்ணப்பித்தால் வீடுதேடி வருவாங்களாம்

முன்பு கடம்பவனக் காடுகளாக இருந்தது மதுரை. பின்பு நகரமயமாக்கல் நடவடிக்கைகளால் மரங்கள் வெட்டப்பட்டு காடுகளின் பரப்பளவு குறைந்தது. மாவட்டத்தில் 2021 கணக்கெடுப்பின்படி 26 ஆயிரத்து 589.3 எக்டேர் பரப்பளவுக்கு காடுகள் உள்ளன. காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு தமிழகம் முழுதும் காடுகளின் பரப்பை அதிகரிக்க, பல்லுயிர்களை பாதுகாத்து இயற்கைச் சூழலை மேம்படுத்தும் நோக்கில், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் (ஜிக்கா) ரூ.920.52 கோடி நிதி உதவியுடன், தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு, பசுமையாக்குதல் திட்டம் (டி.பி.ஜி.பி.,) செயல்படுத்தப்படுகிறது. நடவுசெய்யும் வனத்துறை இத்திட்டத்தில் வீடு, அரசு,தனியார் நிறுவன நிலங்கள், விவசாய நிலங்களில் பொதுமக்கள் கேட்டுக் கொள்வதன் அடிப்படையில், வனத்துறை சார்பில் மரக்கன்று கள் நடப்படுகின்றன. இதற்காக நர்சரிகள் மூலம் 16க்கு 30 செ.மீ., 30க்கு 45 செ.மீ., அளவுள்ள 2 வகை பைகளில் நாற்றுகள் வளர்க்கப்படுகின்றன. மாவட்ட வனக்கோட்டம் சார்பில் நர்சரிகளில் வளர்க்கப்பட்ட 30க்கு 45 செ.மீ., அளவு பைகளில் புங்கன், மந்தாரை, வாகை, பாதான், நீர்மருது உள்ளிட்ட 10 ஆயிரத்து 500 நாற்றுகள், 16க்கு 30 செ.மீ., அளவு பைகளில் மகாகனி, தேக்கு, வேங்கை, செம்மரம் உள்ளிட்ட ஒரு லட்சத்து 11 ஆயிரம் நாற்றுகள் விநியோகிக்கப்படுகின்றன. நகராட்சி, மாநகராட்சி, ஒன்றியத்துக்குள் 30 க்கு 45 செ.மீ., பைகளில் உள்ள நாற்றுகளும், கிராமப்புற விவசாய நிலங்களில் 16க்கு 30 செ.மீ., பைகளில் உள்ள நாற்றுகளையும், நகரத்தில் இருந்து 10 கி.மீ., தொலைவுக்குள் எனில் இரு வகை நாற்றுகளையும் வனத்துறையினர் நடவு செய்து தருகின்றனர். இதனால் பசுமைப் பரப்பு அதிகரிப்பதுடன் நகரில் காற்று, ஒலி மாசு குறையும். யாரை தொடர்பு கொள்வது மாவட்ட வன அலுவலர் ரேவ்டி ராமன் கூறியதாவது: தமிழகத்தில் 2022 கணக்கெடுப்பின்படி 23 சதவீதம் வனப்பரப்பு உள்ளது. அதனை 33 சதவீதமாக மாற்ற உள்ளனர். மதுரையில் உள்ள 14.9 சதவீத பசுமைப் பரப்பை மேலும் அதிகரிக்க இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விருப்பமுள்ளோர் ஆதார், வங்கி பாஸ்புக், நிலத்தின் பட்டா நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் விண்ணப்பித்து மரக் கன்றுகள் பெறலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













புதிய வீடியோ