| ADDED : நவ 26, 2025 05:10 AM
மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவ.,26 முதல் டிச., 8 வரை சர்வதேச ஹாக்கி போட்டி நடக்கிறது. இதையொட்டி நவ.,28 முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரேஸ்கோர்ஸ் ரோட்டைச் சுற்றி எந்த ஒரு வாகனமும் 'பார்க்கிங்' செய்ய அனுமதி இல்லை. தாமரை தொட்டி சந்திப்பிலிருந்து ரேஸ்கோர்ஸ் ரோடு வழியாக யூத் ஹாஸ்டல் சந்திப்பிற்கும், யூத் ஹாஸ்டல் சந்திப்பிலிருந்து தாமரை தொட்டி சந்திப்பிற்கும் விளையாட்டு வீரர்களின் வாகனங்களை தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை. தாமரை தொட்டி சந்திப்பிலிருந்து ரேஸ்கோர்ஸ் ரோடு வழியாக மேலுார் ரோட்டிற்கு செல்லக்கூடிய வாகனங்கள் அவுட்போஸ்ட் வழியாக செல்ல வேண்டும். மேலுார் ரோட்டிலிருந்து யூத் ஹாஸ்டல் சந்திப்பு வழியாக தாமரைத்தொட்டி சந்திப்பிற்கு செல்லும் வாகனங்கள் கக்கன் சிலை சந்திப்பு, யூத் ஹாஸ்டல் சந்திப்பு, பாண்டியன் ஓட்டல் சந்திப்பு, அழகர்கோவில் ரோடு வழியாக செல்ல வேண்டும். அரசுத்துறை வாகனங்கள் தாமரை தொட்டி சந்திப்பு மற்றும் யூத் ஹாஸ்டல் சந்திப்பிலிருந்து ரேஸ்கோர்ஸ் ரோடு வழியாக சென்று கேட் எண் 1 வழியாக மைதானத்திற்குள் செல்ல வேண்டும். பத்திரிகையாளர்கள் வாகனங்கள் ரைபிள் கிளப் வளாகத்தில் நிறுத்திவிட்டு கேட் எண் 5 வழியாக செல்ல வேண்டும். நத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு பகுதி பார்வையாளர்கள் வாகனங்கள் பாஸ்போர்ட் ஆபீஸ் எதிரே உள்ள காலியிடத்தில் நிறுத்திவிட்டு தாமரைத்தொட்டி சந்திப்பு வழியாக மைதானத்திற்கு செல்லலாம். மேலுார் ரோட்டில் இருந்து வருவோர் கக்கன் சிலை சந்திப்பு, யூத் ஹாஸ்டல் சந்திப்பில் பார்வையாளர்களை இறக்கி விட்டுவிட்டு வாகனங்களை பழைய காமராஜர் கல்லுாரி, சமூகஅறிவியல் கல்லுாரி வளாகத்தில் நிறுத்த வேண்டும்.