உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பழங்குடியினர் கிராம சபை நிர்வாகிகளுக்கு பயிற்சி

பழங்குடியினர் கிராம சபை நிர்வாகிகளுக்கு பயிற்சி

மதுரை: பேரையூர் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்கும் கிராம சபை கூட்டங்கள் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இம்மலைப் பகுதியில் குறிஞ்சி நகர், அழகம்மாள்புரம், மொக்கத்தான் பாறை பகுதிகளில் பளியர் சமூகத்தினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பிரிவினரின் வாழ்க்கை முறை மலைப்பகுதியை சார்ந்தே உள்ளது. அவர்களின் வசிப்பிடம், உணவு தேடல் முதல் சமூக தொடர்புகள், பழக்க வழக்கங்கள் என அனைத்தும் மலைக்குள்தான் உள்ளது. அவர்களின் மேம்பாட்டுக்காகவும் தமிழக அரசு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அவர்களை ஒருங்கிணைத்து இலவசமாக வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளனர். ரேஷன், அரசு நலத்திட்டங்கள் வழங்க அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.தற்போது அவர்களுக்கும் கிராம சபை கூட்டம் நடத்த கலெக்டர் பிரவீன்குமார் ஆலோசனைப்படி, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமகிருஷ்ணன், உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல், தாசில்தார் பாலகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்காக ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளுக்கு முதற்கட்டமாக பயிற்சிகள் நடந்தன. இதையடுத்து மேற்கூறிய கிராமங்களில் கிராமசபை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஒரு குழுவில் தலைவர், செயலாளர், ஒரு பெண் உறுப்பினர் உட்பட 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சில நாட்களுக்கு முன் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. கிராம சபைக் கூட்டங்களை எப்படி நடத்துவது, என்னென்ன மாதிரியான தேவைகளை தெரிவிப்பது, குழுவின் பணி என குழுவின் செயல்பாடுகள், கடமைகள், உரிமைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை