புத்துணர்ச்சி பெற்றது உசிலம்பட்டி உழவர் சந்தை
உசிலம்பட்டி : நீண்ட காலமாக செயல்படாமல் இருந்த உசிலம்பட்டி உழவர்சந்தையில் அதிகாரிகளின் முயற்சியால் மீண்டும் விவசாயிகள் காய்கள் விற்பனைக்கு கொண்டு வரத்துவங்கியுள்ளனர்.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் உசிலம்பட்டி சந்தை திடலுக்குள் உழவர் சந்தையைக் கொண்டு வந்தனர். நுகர்வோர்ஆர்வமின்மை, பலதரப்பட்ட காய்கள் கிடைக்காத காரணங்களால் சந்தையின் செயல்பாடு குறையத் துவங்கியது. ஒரு கட்டத்தில் உழவர்சந்தை செயல்படாமலே நின்று போனது. கடந்த மாதம் முதல் வேளாண் அதிகாரிகள் உழவர்சந்தையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தினசரி காய்களின் விலைப்பட்டியில், எலக்ட்ரானிக் தராசு மூலம் சரியான எடை, புத்தம் புதிய காய்களுடன் முதற்கட்டமாக 10 க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் உழவர் சந்தையை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.வெளி மார்க்கெட்டில் காய்களின் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் உழவர் சந்தையில் விவசாயிகளிடம் நேரடியாக காய்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். நேற்று வேளாண் துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி உழவர் சந்தையைப் பார்வையிட்டார். விவசாயிகள், நுகர்வோருக்கு தேவையான வசதிகள் செய்து தரும்படி நிர்வாக அலுவலர் சமுத்திரபாண்டி, உதவி நிர்வாக அலுவலர் சிந்துவிடம் ஆலோசனை வழங்கினார். உசிலம்பட்டி உழவர் சந்தைக்கு காய்கறிகள் கொண்டு வர விரும்பும் விவசாயிகள் 94420 35348 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.