எடை குறைவான குழந்தைகளுக்கு காப்பீட்டுத் திட்டம்; மதுரை அரசு மருத்துவமனைக்கு எப்போது வரும்
மதுரை : எடை குறைவான குழந்தைகளுக்கான முதல்வரின் இலவச காப்பீட்டு திட்டத்தை மதுரை அரசு மருத்துவமனையில் விரைந்து செயல்படுத்த வேண்டும்.சென்னை, செங்கல்பட்டுக்கு அடுத்து தமிழகத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் மட்டுமே பச்சிளம் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு துறை தனியாக உள்ளது. இங்கு தினமும் 40 முதல் 50 குழந்தைகள் பிறக்கின்றனர். 2.5 கிலோவுக்கு கீழே எடையுள்ள குழந்தைகள் எடை குறைவானவை. இதிலும் ஒன்றரை கிலோ எடைக்கு கீழே (வெரி லோ பர்த்) உள்ள குழந்தைகள் தனியாக உள்ளனர். கடந்தாண்டு மகப்பேறு வார்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 151. அதில் 21.8 சதவீதம் அதாவது 2869 குழந்தைகள் எடை குறைவாக பிறந்தனர்.முதல்வரின் இலவச காப்பீட்டு திட்டத்தில் இதய நோய், மூச்சுத்திணறல் என ஒவ்வொரு நோய்க்கும் 'பேக்கேஜ்' அடிப்படையில் காப்பீட்டு தொகை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். முதன்முறையாக எடை குறைவான குழந்தைகளுக்கான காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதை மதுரை அரசு மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு வரவேண்டும்.டீன் அருள் சுந்தரேஷ்குமார், பச்சிளம் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் அசோக் ராஜா கூறியதாவது: எடை குறைவான சில குழந்தைகள் நார்மலாக இருந்தால் கூட மூச்சுத்திணறல் ஏற்படுகிறதா, சர்க்கரை அளவு, உடல் வெப்பம் குறைகிறதா என ஓரிரு நாட்கள் வரை கண்காணிக்க வேண்டும். இத்துறையின் கீழ் உள்நோயாளி, வெளி நோயாளி வார்டுகளில் தினமும் 130 முதல் 140 பச்சிளம் குழந்தைகள் பல்வேறு நோய்க் குறியீடுகளுடன் சிகிச்சையில் உள்ளனர். அதுபோன்ற பிரச்னைகளுக்கு காப்பீட்டு திட்டம் இதுவரை இல்லை.குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் வெதுவெதுப்பு தரும் வார்மர், ஆக்சிஜன், மஞ்சள் காமாலைக்கான போட்டோதெரபி இயந்திரம், குளுக்கோஸ் செலுத்துவதற்கு தேவையான அளவீட்டு பம்புகள், குழந்தைகளுக்கு தொடர்ந்து காற்றை செலுத்தும் சி - பாப் இயந்திரங்கள், அதற்கடுத்த நிலையில் 25 வெண்டிலேட்டர் வசதிகள் இங்குள்ளன. இத்தனை வசதிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளின் இறப்பு விகிதம் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. எடை குறைந்த குழந்தைகளுக்கான காப்பீட்டு திட்டம் மதுரைக்கு கிடைத்தால் கிடைக்கும் தொகை மூலம் இத்துறைக்கு தேவையான கருவிகளை கூடுதலாக வாங்கமுடியும். உள் கட்டமைப்பு வசதிகளை இன்னும் மேம்படுத்தலாம் என்றனர்.