உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநில வழிகாட்டுதல் குழு கூட்டம் எப்போது துாக்கத்தில் உணவுப்பாதுகாப்புத்துறை

மாநில வழிகாட்டுதல் குழு கூட்டம் எப்போது துாக்கத்தில் உணவுப்பாதுகாப்புத்துறை

மதுரை : உணவுப்பாதுகாப்புத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 6 பகுப்பாய்வு ஆய்வகங்களில் காலாவதியான உணவுப் பொருட்களையே பகுப்பாய்வு செய்வதால் தரம் குறைவு என்று விதிமீறி அபராதம் விதிக்கின்றனர். இப்பிரச்னைகளை பேசி தீர்க்கும் வகையிலான மாநில வழிகாட்டுதல் கூட்டத்தை தற்போது வரை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் நடத்தவில்லை என எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் சங்கத்தினர் தெரிவித்தனர். மக்களுக்கு தரமான, பாதுகாப்பான உணவு கிடைக்க வேண்டும் என்பது தான் உணவுப்பாதுகாப்புத்துறை அமைக்கப்பட்டதன் நோக்கம். ஓட்டல், மளிகை கடை, எண்ணெய் கடை உட்பட பல்வேறு இடங்களில் அவ்வப்போது உணவுப் பாதுகாப்புத் துறையினர் 'ரேண்டம் சாம்பிள்' என்ற பெயரில் உணவு, உணவுப்பொருள் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துச் செல்கின்றனர். பொருட்களை எடுத்துச் சென்ற 14 நாட்களுக்குள் அதை ஆய்வு செய்து அறிக்கையை அந்தந்த வணிக நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டும். உடனடியாக ஆய்வு செய்யாமல் ஆறுமாதம் முதல் ஓராண்டு கழித்து தான் ஆய்வு செய்கின்றனர். இந்த அறிக்கை எப்படி உண்மையாக இருக்கும். பொருளுக்கான தேதி காலாவதியான பின் ஆய்வு செய்து அறிக்கை வழங்குவது 'போஸ்ட் மார்ட்டம்' செய்வது போன்றது என்கின்றனர் சங்கத் தலைவர் அருணாச்சலம், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி. அவர்கள் கூறியதாவது எங்களிடம் உணவுப்பொருள் மாதிரிகளை சேகரிக்கும் போது அந்த பொருட்களுக்கு உயிர் உள்ளது. அதாவது கம்பு, அரிசி, கோதுமை மாவு வகைகளுக்கு 3 மாதம், எண்ணெய் வகைகளை வாங்கிய ஆறு மாதங்களுக்குள் பயன்படுத்தலாம் என காலநிர்ணயம் குறிப்பிட்டு லேபிள் தயாரிக்கிறோம். கால தாமதமாக ஆய்வு செய்வது பகுப்பாய்வு நிறுவனங்களின் தவறு. காலாவதியான பின் ஆய்வு செய்து விட்டு பொருளின் தரம் குறைவு என்று சொல்லி அபராதம் விதிக்கின்றனர். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆய்வகத்தில் உடனுக்குடன் ஆய்வு செய்தாலே எங்களுக்கு பிரச்னை வராது. இதற்கெல்லாம் மாநில உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பதில் சொல்வதில்லை. துாங்கும் துறை வணிகவரித்துறை தொடர்பாக பல்வேறு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் உணவுப்பாதுகாப்புத்துறைக்கான மாநில அளவிலான ஆய்வு கூட்டத்தை இதுவரை சுகாதார அமைச்சர் சுப்ரமணியன் நடத்தவில்லை. தமிழகத்தில் பல்வேறு வணிகர் சங்கங்கள் உள்ளன. இந்த சங்க பிரதிநிதிகளை அழைத்து மாநில அளவிலான வழிகாட்டுதல் குழு கூட்டம் நடத்தவில்லை. இந்த கூட்டம் நடந்தால் எங்கள் பிரச்னைகளையும் குறைகளையும் அரசுக்கு சொல்ல முடியும். அதிகாரிகள் பக்கமுள்ள தவறுகளையும் சரிசெய்ய முடியும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ